வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

காஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதல்: நாட்டை பாதுகாக்க செல்கிறேன்: அரியலூர் வீரரின் உறுதி

DIN | Published: 16th February 2019 08:59 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்தவரகளில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரனும் ஒருவர்.  
அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சின்னையன் - சிங்காரவள்ளி தம்பதியின் மகன் சிவசந்திரன் (38). இவருக்கு ஜெயந்தி,  ஜெயசித்ரா என இரு சகோதரிகள். சகோதரர் செல்வேந்திரன் சென்னையில் கடந்தாண்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சிவசந்திரன், கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்து காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.  2014-ல் காந்திமதி என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 வயதில் சிவமுனியன் என்ற மகன் உள்ளார். 
ஜனவரி மாத முதல் வாரத்தில் கார்குடிக்கு வந்த சிவசந்திரன், மாலை அணிந்து சபரிமலை  சென்று விட்டு பின்னர், பிப். 9 ஆம் தேதி மீண்டும் பணியில் சேரச் சென்றுள்ளார். இந்நிலையில் ஜம்முவில் நடந்த தாக்குதலில் சிவசந்திரன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். 
சிவசந்திரனின் மனைவி காந்திமதி கூறுகையில்,  2 வயது மகனுடன், வயதான மாமனார், மாமியாருடன் எவ்வாறு வாழப்போகிறேன்.   நாட்டைப் பாதுகாக்கச் செல்கிறேன் எனக் கூறி சென்றார். தற்போது, எங்களைப் பாதுகாக்க யாரும் இல்லையே என கண்ணீர் விட்டு அழுதது மற்றவர்களையும் கலங்க வைத்தது. 
சிவசந்திரனின் தந்தை சின்னையன் கூறுகையில்,  வீட்டுக்கு ஒரு பிள்ளையாக வைத்திருந்த சிவசந்திரனை இழந்து நிற்கிறோம். 
எங்களது காலத்துக்கு பின்பு மருமகளையும், பேரப்பிள்ளையையும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லையே என்றார்  கண்ணீருடன்.

More from the section

நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.16.55 லட்சம் பறிமுதல்
மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது


தொகுதிக்கு 100 பேர் போட்டி: பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல்: வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த செலவினப் பார்வையாளர்