24 மார்ச் 2019

சிவச்சந்திரன் உடலுக்கு: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

DIN | Published: 17th February 2019 03:27 AM

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவச்சந்திரனின் உடலுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமனோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
புதுதில்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட வீரர் சிவச்சந்திரனின் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.மாலை 4 மணிக்கு கார்குடி சிவச்சந்திரன் உடல் கார்குடி வந்தது. அப்போது அவரது மனைவி காந்திமதி, மகன் சிவமுனியன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனந்தகுமார் ஹெக்டே, மாநில அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்,  மத்தியப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. சோனல் வி.மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கரன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வைத்தி,காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ராஜேந்திரன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் உலகநாதன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மணிவேல் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள்,அமைப்புகள் மற்றும் அனைத்து மதத்தினர்,பொதுமக்கள் கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக கார்குடிக்கு சிவச்சந்திரன் கொண்டு செல்லும் வழியிலும், அவரது கிராமத்திலும் பொதுமக்கள், இளைஞர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதோடு, அவரது உடல் கொண்டு வரப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது மலர்தூவினர்.
பெரம்பலூரில் இளைஞர்கள் அஞ்சலி:   பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் தி. சத்யா முன்னிலை யில், இளைஞர்கள் இயக்கத்தினர்  உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.  
கல்லூரிப் பேராசிரியர்கள் சந்திர மெளலி, குமணன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், இளைஞர்கள் இயக்க நிர்வாகிகள் என்.டி. கண்ணன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 
ராணுவ வீரர் உடலுக்கு மலரஞ்சலி:   வீரர் சிவச்சந்திரன்உடல் பெரம்பலூர் வழியாக அரியலூர் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 
பெரம்பலூர் நான்கு சாலை வழியாகச் சென்றபோது, அவரது உடலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினரும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
இதேபோல, சாலையின் பல்வேறு இடங்களில் கூடியிருந்த பொதுமக்கள் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  
திருமானூரில் மௌனஊர்வலம்: அரியலூர் மாவட்டம், திருமானூரில் சிஆர்பிஃஎப் வீரர் சிவச்சந்திரனுக்கு  பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மௌனஊர்வலம் நடத்தப்பட்டது.
திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இளமுருகன் தலைமையில், பள்ளியில் தொடங்கிய மௌன ஊர்வலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 
 மாணவ,மாணவிகள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றனர். இதில் ஊராட்சி செயலர் மூர்த்தி, அம்பேத்கர் மன்றத்தைச் சேர்ந்த பிச்சைமணி, வெற்றிவேந்தன், கார்த்திக், கிருபா, கலைவாணன், மாரியப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு