புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

முழு அடைப்புப் போராட்டம்: 2,000 லாரிகள் இயங்கவில்லை

DIN | Published: 11th September 2018 08:43 AM

கரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக 2,000 லாரிகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல இயங்கியதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார், சிற்றுந்து  பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. மேலும், வெள்ளியணை, ஜெகதாபி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் மளிகைக் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. கரூர் நகர் பகுதியில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. லாரி, ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்படவில்லை. சில இடங்களில் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன.  மாவட்டத்தில் பள்ளபட்டி, அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் மட்டும் சுமார் 200 ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.  
இதுகுறித்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ராஜூ கூறுகையில், ஏற்கனவே லாரிகளுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, உதிரிபாகங்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் நசிவடைந்து வருகின்றன. தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.  டீசல் விலை உயர்வையடுத்து லாரி வாடகையை உயர்த்த வேண்டியுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளோம். 
கரூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் 2,000 லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் புகழூர் டிஎன்பிஎல் ஆலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு காகிதம் எடுத்துச்செல்லும் பணிகள் முடங்கியது. மேலும் ஜவுளி தொழிலில் சாயமேற்ற ஆலைகளுக்கு துணிகளை எடுத்துச் செல்லுதல், சர்க்கரை ஆலைகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சர்க்கரை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. 
லாரிகள் இயக்கப்படாததால் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்தன என்றார்.
மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 68 பேர் கைது: கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்  68 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 மத்திய அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில்  வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தப்பட்டதைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், கோவைச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
 நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரைக் கைது செய்தனர். 
ஆர்ப்பாட்டம்: கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேங்க் கே.சுப்ரமணியம், மதிமுக மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குமாரசாமி, ஆதிதமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் முல்லையரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழுக்கங்கள் எழுப்பினர். அதேபோல, பள்ளபட்டி பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் தொழில்சங்கம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் லைவர் உபைதுர் ரகுமான் தலைமை வகித்தார். 
மனிதநேய தொழிற்சங்கத் தலைவர் சாகுல்அமீது, செயலாளர் ரபீக், நிர்வாகிகள் காஜா,  முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

திருச்சி - கோவைக்கு ரூ. 3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை
எதிரிகளை வீழ்த்தவே மாற்றுக்கொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி
திருக்குறள் பேரவையின் ஆண்டுவிழா  போட்டிகளுக்கான முடிவு வெளியீடு


திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

"குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொணர வேண்டும்'