செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

மழைக் காலத்திற்குள் தடுப்பணை பணி முடிக்க உத்தரவு

DIN | Published: 12th September 2018 07:38 AM

மழைக்காலத்திற்குள் தடுப்பணை கட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன்.
கரூர் ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் மற்றும் காதப்பாறை ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார். 
வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பங்களா நகர் பகுதியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்படும் அம்மா பூங்கா பணிகளை பார்வையிட்ட  ஆட்சியர், பூங்காவில் அதிகளவில் மரங்கள், அழகு தரும் செடிகளை நடவு செய்து, பொதுமக்கள் அதிகளவில் பூங்காவிற்கு வந்துசெல்லும் வகையில் தேவையான வசதிகளை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 மேலும், நிரந்தர நீர் பாசன வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும். வேட்டமங்கலம் பகுதியில் ரூ.1 லட்சத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்ட அவர் வரிசையாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் சுழற்சி முறையில் குப்பைகளைக் கொட்டி சீரான மண்புழு உரம் தயாரிக்கவும், மண்புழு தயாராகும் தொட்டிகளில் எலிகள் புகாவண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.மேலும், அதே பகுதியில் கால்நடைகள் நீர் அருந்துவதற்காக ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்படும் தொட்டியை பார்வையிட்டு குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை தொட்டியை சுத்தம் செய்து தண்ணீரை மாற்றி வழங்க  அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதி வழியாகச் செல்லும் உன்னுத்துபாளையம் ஓடையில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.28 லட்சத்தில் ஒரு தடுப்பணையும், ரூ.9.80 லட்சம் மதிப்பில் ஒரு தடுப்பணையும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது.  மீதமுள்ள பணிகளை மழைக்காலத்திற்குள் முடித்து நீர் தேக்கி,  அதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டி பயன்பெற விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், ஓலப்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவரின் விவசாய நிலத்தில் ரூ.1.55 லட்சத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியையும், வேலுச்சாமி என்பவரின் விளைநிலத்தில் ரூ.1லட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், இதன் பயன்கள் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துக்கூறி மேலும் தேவைப்படும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அறிவுறுத்தினார்.
காதப்பாறை ஊராட்சியில், பெரிச்சிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில், ரூ. 8.50 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்தையும், குப்புச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.89 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவரையும் பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடித்து கட்டட வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து  பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இவ்வாறு வேட்டமங்கலம் மற்றும் காதப்பாறை ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 64.15 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், ஒன்றிய பொறியாளர் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.
 

More from the section


வீடு புகுந்து நகை திருடியவர் கைது

நிலத் தகராறில் மூவருக்கு வெட்டு: 3 பேர் கைது
அதிமுக சார்பில் குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு


இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணி தேர்வு