வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கக் கோரி துப்புரவுப் பணியாளர்கள் மனு

DIN | Published: 11th September 2018 08:51 AM

அரும்பாவூர் பேரூராட்சியில் தினக்கூலியாக பணிபுரிந்த நாள்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கக் கோரி துப்புரவுப் பணியாளர்கள் மனு அளித்தனர். 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு:  அரும்பாவூர் பேரூராட்சியில் 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். மாவட்ட ஆட்சியரால் 2018-19ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலி ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்த நாள்களுக்கு உரிய ஊதியத்தை முழுமையாக வழங்காமல் மாதத்துக்கு 3 நாள்கள் வீதம் ஊதியம் பிடித்தம் செய்து சம்பளம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம் பெற்று வரும் எங்களிடம், ஊதியத்தை பிடித்தம் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால் உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். 
இதனால், எங்களது அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். மேலும், துப்புரவுப் பணியாளர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை படிவத்தில் கையெழுத்து போட உயரதிகாரிகள் மறுக்கின்றனர். 
இதனால், கல்வி உதவித்தொகை பெற இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த குறைகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.
 

More from the section

தங்குதடையின்றி புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்
எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜன. 29-இல் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 
திருவள்ளுவர் பிறந்த நாள்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பெரம்பலூர், அரியலூரில் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்