புதன்கிழமை 16 ஜனவரி 2019

"இணையவழிப் பயன்பாட்டால் காகிதம் முற்றிலும் குறையும்'

DIN | Published: 12th September 2018 07:42 AM

கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் நேரடி இணைய வழி பட்டியல் சமர்ப்பிக்கப்படும் முறையால், கருவூலத் துறையில் 1,000 டன் காகிதப் பயன்பாடு முற்றிலும் குறையும் என்றார் கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர். 
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட திறனூட்டல் மாநாடு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூலப் பணிகளை மேம்படுத்தும் வகையிலும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 288.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை மூலம் கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவதோடு, சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையவழி மூலமாக பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பித்து, அதே நாளில் வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கி வசதி மூலம் தீர்வுகாண முடியும். 
பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் சேரும் வரை, ஒவ்வொரு நிலையையும் வெளிப்படையாகவும், எளிதாகவும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முறையால் கருவூலத் துறையில் 1,000 டன் காகிதப் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்படுவதுடன் பணியாளர்களது பணிச்சுமையும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.  
இத்திட்டம் மூலமாக சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட உள்ளன. அனைத்து அரசுப் பணியாளர்களும், அவரவர் பணிப் பதிவேட்டை கணினி மற்றும் கைப்பேசி செயலி மூலமாக தங்களுக்குரிய கடவுச் சொற்களை பயன்படுத்தி அறிந்துகொள்ள இயலும். பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்னும் முறையை பயன்படுத்தி உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து, சரிசெய்துகொள்ள முடிவும்.  
பணிப்பதிவேடுகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் கால விரயம் குறைவதுடன் காணாமல் போகும் நிலை, தீ விபத்து போன்ற நிலையிலிருந்து பாதுகாப்பு அளிக்க முடியும். பணிப்பதிவேடுகளின் விவரங்கள் கணினி மூலம் மேற்கொள்ளப்படுவதால் பதவி உயர்வு கருத்துருக்கள் தயாரித்தல், வருடாந்திர ஊதிய உயர்வு அங்கீகரித்தல், ஊதிய நிர்ணயம், விடுப்பு அங்கீகரிப்பு மற்றும் ஓய்வூதிய கருத்துருக்கள் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை சரியான காலத்தில் மேற்கொள்ள இயலும். 
இப்புதிய திட்டம் நவ. 18 முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு, பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு 4 நாள்களுக்கு பயிற்சியும், கருவூல அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.   மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை) மகாபாரதி, முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) புகழேந்தி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More from the section


கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: முதியவர் சாவு
தேசிய டேக்வாண்டோ: விளையாட்டு விடுதி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்
மதுரகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா


வேளாண் விற்பனை உள்கட்டமைப்பு மேம்பாடு கருத்தரங்கம்