வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

புதுகை மாவட்டத்தில் 9 பேர் சாவு: மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிப்பு

DIN | Published: 17th November 2018 08:47 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கோரதாண்டவமாடிய கஜா புயலுக்கு 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என 9 பேர் உயிரிழந்தனர்.
மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள், நகர்ப் பகுதிகள் இருளில் மூழ்கியது. செல்லிடப் பேசி கோபுரங்கள் சரிந்து இணையதளம், தரைவழி தொலைபேசி, செல்லிடப்பேசி இணைப்பு தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் மாவட்டம் தனித்தீவாகியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய புயல், மழை, சூறைக்காற்று இடைவிடாது இரவு வரை நீடித்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டைக்கு செல்லக்கூடிய பல்வேறு முக்கிய சாலைகளில் ஏராளமான மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதேபோல, புதுக்கோட்டை நகர்ப் பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின் கம்பிகள் சாலையில் கிடப்பதால் மாவட்டம் முழுவதிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வீடுகளில் சாய்ந்ததால் 100க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம், வருவாய், காவல்துறையினர் உள்ளிட்டோர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் வீட்டின் மேல்பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்பகம்பங்கள் சரிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா, வாழை,  கரும்பு, காய்கறி பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.
சுங்கச் சாவடி சேதம்: திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமணப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியும் கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. கணினி, மின்சார ஒயர்கள், மின்கம்பங்கள் சரிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு பேருந்துகள் செல்ல முடியாததால் போக்குவரத்து முடங்கியது.
9 பேர் சாவு: அறந்தாங்கி அருகே மங்களநாட்டைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது மரம் விழுந்ததில் உயிரிழந்தார். ஆலங்குடி அருகே பாட்டி கோட்டையைச் சேர்ந்த ரங்கசாமி, பம்பு செட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். விராலிமலை தெற்கு தெருவைச் சேர்ந்த சுதிர்குமாரின் மனைவி பரமேஸ்வரி (25) வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டையில் மேகலா (6), அன்னவாசலில் சீதாயி (63), ரெத்தினக்கோட்டை பொன்னம்மா (50) ஆகியோரும் வீடு இடிந்து உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதிலும் கஜா புயலால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர்களது முழு விவரங்களை வருவாய்த்துறையினர் சேகரித்து வருகின்றனர்.  அதேபோல, உழவு மாடுகள், பசுமாடுகள், ஆடுகள், கன்றுக்குட்டிகள் என 500-க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.


300 படகுகள் சேதம் 
புயல் எச்சரிக்கை காரணமாக நாட்டுப் படகு மீனவர்கள் 3 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டருந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 60 விசைப்படகுகள் என்ன ஆனது என தெரியவில்லை.

மீட்புப் பணிகள் தீவிரம் 
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதப் பகுதிகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். வருவாய், தீயணைப்பு, காவல், சுகாதாரம், உள்ளாட்சி நிர்வாகம் என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முகாம்கள் 
கட்டுமாவடி, முத்துக்குடா, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், பிள்ளையார்திடல், அந்தோனியார்புரம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி உள்ளிட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாவல் ஏரி பகுதியில் குடிசை வீட்டில் இருந்த 27 நரிக்குறவர் குடும்பங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

More from the section

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம்
350 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
கணினி மூலம் தேர்தல் பணிகள்  ஒதுக்கீடு
கோயில்களில் பங்குனி உத்திரம்
கீரனூரில் திமுக பொதுக்கூட்டம்