செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுகையில் கடைகள் அடைப்பு: 12 இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியல்

DIN | Published: 11th September 2018 08:48 AM

பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் புதுகை  மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வரலாறு காணாத  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், புதுகை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட இடங்களில் ஒருசில கடைகளைத் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கின. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. 
புதுகை புதிய பேருந்து நிலையம் அருகே  காங்கிரஸ், திமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில், சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை கிழக்கு 4 ஆம் வீதியில் தினசரி சந்தை வியாபாரிகள், கடைகளை அடைத்து,  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, புதுகை புதிய பேருந்து நிலையம் அருகே  இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் தலைமையில் இடதுசாரிகள் மறியலில் ஈடுபட்டனர். 
அறந்தாங்கியில் 80 பேர் கைது:  அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ. பாலசுப்பிரமணியன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். 
கந்தர்வகோட்டையில் 100 பேர் கைது: வெள்ளைமுனியன் கோயில் திடலில் இருந்து ஊர்வலமாக பேருந்து நிலையம் சென்று அங்கு  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
பொன்னமராவதியில் 79 பேர் கைது: பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் தலைவர் கே.செல்வராஜன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
திமுக ஒன்றிய செயலர் அ.அடைக்கலமணி, காங்கிரஸ் நகரத்தலைவர் எஸ்.பழனியப்பன் உள்ளிட்ட திரளான கட்சியினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பேருந்துநிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎம் ஒன்றிய செயலர் என்.பக்ரூதீன் உள்ளிட்ட 60 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.  இந்திய கம்யூ. கட்சியின் சார்பில் மாவட்ட துணைச் செயலர் ஏனாதி ஏஎல்.ராசு தலைமையில் பேருந்துநிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலையில் 36 பேர் கைது: அன்னவாசல் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூ. கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி,   கீரனூர், பொன்னமராவதி, அன்னவாசல், ஆவுடையார்கோவில், மணமேல்குடி, விராலிமலை உள்ளிட்ட  12 இடங்களில்  சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூ. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 86 பெண்கள் உள்பட 446 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

More from the section

அரிமளம் சிவகமலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி
ஆலவயலில் வீணாகும் காவிரி குடிநீர்
நாளை திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விஜயரகுநாதபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்