சனிக்கிழமை 23 மார்ச் 2019

அரசுப் பள்ளிகளுக்கு கல்விச்சீர் அளிப்பு

DIN | Published: 22nd February 2019 09:26 AM

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் வியாழக்கிழமை கல்விச்சீர் வழங்கப்பட்டன.
நெடுவாசல் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்க முடிவு செய்தனர். தொடர்ந்து, பள்ளிக்குத் தேவையான மேசை, நாற்காலி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட உபகரணங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவி தலைமையில் மாணவர்களின் பெற்றோர்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.புஸ்பம், உதவி ஆசிரியை முத்துமாரி உள்ளிட்டோர் வரவேற்றனர். நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அன்னவாசலில்... அன்னவாசல் ஒன்றியம், மேலூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை கிராம மக்கள் கல்விச்சீர் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மா.ராணி தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும்  கிராமக் கல்விக் குழுவினர் இணைந்து பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான எழுதுபொருள்கள், தோட்டக் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், குப்பைத் தொட்டி, குடம், தட்டு, டம்ளர், சமையல் பாத்திரம் ஆகிய பொருள்களை ஊர்வலமாகக் கொண்டு வந்து பள்ளி தலைமையாசிரியர் அ. கிறிஸ்டியிடம் வழங்கினர். சீர் பொருள்களைப் பெற்றுக் கொண்ட அவர், கிராம கல்விக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். 
விழாவில், அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர் அரு.பொன்னழகு, பெ. துரையரசன், வட்டார  வளமைய மேற்பார்வையாளர் அ. கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் முஜ்ஜமில் கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கல்விச்சீர் கொண்டு வந்த பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளி வளர்ச்சி குறித்த பெற்றோர், ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை சுஜாமெர்லின் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியை எஸ்தர் கிறிஸ்டியானா,  கிராமக் கல்விக் குழுவினர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் செய்திருந்தனர்.

More from the section

"பெண் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் பணி வேண்டும்'
"கல்வியுடன் நற்பண்புகளையும் வளர்க்க வேண்டும்'
மக்களவைத் தேர்தல்: "மாவட்டத்தில் இதுவரை ரூ. 18.95 லட்சம் பறிமுதல்'


பைக்- லாரி மோதல்: இளைஞர் சாவு


குடுமியான்மலையில் தெப்ப உத்ஸவம்