24 மார்ச் 2019

திருவள்ளுவர், வள்ளலாரை தமிழர் அடையாளமாகக் கொள்ள வேண்டும்: கவிஞர் அறிவுமதி

DIN | Published: 22nd February 2019 09:26 AM

முருகனையும், திருவள்ளுவரையும், வள்ளலாரையும் தமிழர் அடையாளமாகக் கொள்ள வேண்டும் என்றார் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி.
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சொற்பொழிவில், "உயிர்களின் தாய் - தமிழ்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. காரணம் தமிழ் மண் தான் அறிவுசார் மண்.  சென்னை  புத்தகத் திருவிழாவில், பெரியாரின் நூல்களும், அம்பேத்கரின் நூல்களும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்களும் ஏராளம் விற்றதைக் கண்டேன். 
தமிழ்மொழிக்கென ஒரு விழாவை அரசே நடத்துகிற நாடு சிங்கப்பூர். ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் ரூபாய் நோட்டின் மதிப்பைக் குறிப்பிடும் நாடு மொரீஷியஸ். சங்க இலக்கியத்தில் முருகன் ஒரு குறுநில மன்னன். முருகனின் தாய் கொற்றவை. எனவே, முருகனையும், வள்ளலாரையும், திருவள்ளுவரையும் தமிழர் அடையாளமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்ச் சமூகம் அடிமைப்படுத்தப்படாமல் காப்பாற்றப்படும். தேத்தாங்கொட்டை, படிகாரக்கற்களையும் கொண்டு கெட்ட நீரையும் தெளியவைத்து, சுத்தப்படுத்திக் கொடுத்த அறிவியல் - தமிழர் அறிவியல். 
மனிதநேயம் என்பதை சங்க இலக்கியம் ஏற்கவில்லை. மாறாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பதுதான் தமிழர் நேயம்.
வில் - அம்பு என்ற கொலைக்கருவிகளையும் கலைக் கருவிகளாக (வில்லுப்பாட்டு)  மாற்றியவர்கள் எம் நெல்லைத் தமிழர்கள். மரம் வெட்டி, காடு வெட்டி என்ற சொல் எங்கும் சங்கத் தமிழில் இருக்காது. மாறாக, மரம் கொன்று, காடு அழித்து என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்றார் அவர். 
"வாழ்வே அறிவியல்' என்ற தலைப்பில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பொ. ராஜமாணிக்கம் பேசியது:
நாட்டில் அதிகளவில் அறிவியல் வளர்ந்தும் சாதியையும் மதத்தையும் விட்டு வெளியே வர பலரும் தயாராக இல்லை. எல்லா உயிர்களும் அழிந்து போகக் கூடியவையே என்பதை உணர்ந்தால் மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. அசோகத் தூண் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் துருப் பிடிக்காமல் இருக்கிறதே அதுதான் அறிவியல். பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவன் இந்தியன். துத்தநாகத்தை பிரித்து எடுத்துப் பயன்படுத்தியவர்கள் நம்மவர்கள். எனவே வாழ்க்கையை அறிவியலாக வாழ வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சிக்கு, டாக்டர் எஸ். ராமதாஸ் தலைமை வகித்தார். வாசகர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சா. விஸ்வநாதன் வரவேற்றார். கா. ஜெயபாலன் நன்றி கூறினார்.
 

More from the section

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி
கந்தர்வகோட்டை அருகே தப்பாட்டம் ஆடியவரை தாக்கிய இருவர் கைது
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
புதுகை, கந்தர்வகோட்டை தொகுதிகளில்41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி