வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தைப்பூசம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி

DIN | Published: 22nd January 2019 09:45 AM

தைப்பூச நாளான திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேசுவரர், திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் உடனுறை பிரகதாம்பாள், புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்மன், கோட்டூர் மீனாட்சி சுந்தரேசுவரர், விராச்சிலை வில்வம்வனேசுவரர் ஆகிய கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக புதுக்கோட்டை பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று பாலம் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
இங்கு சுவாமிகளுக்கு வெள்ளாற்றில் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம், கோட்டூர், பூசத்துறை, விராச்சிலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
திருவரங்குளம் சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருளச் செய்து 2 தேர்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக திருவிடையார்பட்டி வெள்ளாற்றிற்கு கொண்டு சென்றனர்.  அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதி முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாத பெளர்ணமியன்று தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிகழாண்டும் கந்தர்வகோட்டை  ஆபத்சகாயேசுவரர் கோயிலில் தனி சன்னதியாக காட்சிதரும் பாலமுருகன் சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், திரவியம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல், வேம்பன்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், தச்சங்குறிச்சி குகை முருகன் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ஆலங்குடி: கீரமங்கலத்தில்  உள்ள பழைமைவாய்ந்த  மெய்நின்றநாதர் கோயிலில் சுப்ரமணியர் சுவாமிக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல், ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள்குதிரைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். சேந்தன்குடி ஜெயநகரத்தில் செயற்கை மலையில் அமைக்கப்பட்டுள்ள பழைமைவாய்ந்த பாலசுப்ரமணியர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுமாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து, இளைஞர்களுக்கு வழுக்குமரம் ஏறும் போட்டி, இளவட்டக்கல் தூக்குதல், மகளிருக்கு கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணியர் கோயிலில் கடந்த 13 ஆம் தேதி நிகழாண்டுக்கான தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குபின் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருள புறப்பட்ட தேர் முக்கியவீதிகளின் வழியே வலம்வந்து தேரடியில் நிலையை அடைந்தது. காரையூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேனிமலை சுப்பிரமணியர் கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், உலகம்பட்டி ஞானியார்மடம் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

More from the section

அரசுப் பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் தர்னா
விதிகளை மீறியதாக 8 விசைப்படகுகள் பறிமுதல்
திருவள்ளுவர், வள்ளலாரை தமிழர் அடையாளமாகக் கொள்ள வேண்டும்: கவிஞர் அறிவுமதி
அரசுப் பள்ளியில்  உலக தாய்மொழி தினப் போட்டிகள்
அரசுப் பள்ளிகளுக்கு கல்விச்சீர் அளிப்பு