புதன்கிழமை 17 ஜூலை 2019

மார்பக புற்றுநோய் வராமலிருக்க பெண்கள் தாய்ப்பால் புகட்டுவது அவசியம்: அரசு மருத்துவமனை முதல்வர் பேச்சு

DIN | Published: 08th August 2018 04:06 AM

தாய்ப்பால் புகட்டுவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் அபாயம் குறையும் என்றார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் எம். இளங்கோவன். 

 தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழாவின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வந்திருந்தவர்களை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகர் வரவேற்றார். பிரசவ சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் எஸ். பிரதீபா, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் பி. ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் எம். இளங்கோவன் பேசியது:

எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்ட வேண்டும் என்பதை மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதாது. தாய்ப்பால் புகட்டுவதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் குறையும் என்பதையும் எடுத்துக் கூறுவது அவசியம்.
பெண்கள் மார்பக புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்ள குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். மேலும், அரசு வழங்கும் பிரசவ கால விடுப்பை தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.  
முன்னதாக, கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற இந்துமதி (9 மாதம்), ரச்விகா (3 மாதம்), அகிலன் (ஒன்றரை வயது) ஆகிய குழந்தைகளுக்கும், ஒரு வரி முழக்கப் போட்டியில் வெற்றி பெற்ற செவிலிய மாணவிகள் தேவிபிரியதர்ஷினி, பியுலா, சினேகா ஆகியோருக்கும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பவதாரிணி, சண்முகப்பிரியா, கார்த்திகா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செவிலிய மாணவிகளின் நாடகமும், வில்லுப்பாட்டும் நடத்திக் காண்பிக்கப்பட்டது. 
இதில் குழந்தைகள் பிரிவின் டாக்டர்கள் அரவிந்த், லெனின் சந்திரசேகரன், வி. ரங்கபாஷ்யம், செவிலிய பள்ளி மாணவிகள், மருத்துவர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 நிறைவில் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.எஸ். சுப்புராமன் நன்றி கூறினார்.


 

More from the section

சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் ஜங்கம் சமூக நலசங்க குடும்ப விழா
உலக திருக்குறள் மைய கூட்டம்
பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


பட்டுக்கோட்டை அருகே இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி