புதன்கிழமை 16 ஜனவரி 2019

"உலகளவில் பழங்குடியினர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்'

DIN | Published: 11th September 2018 09:20 AM

உலக அளவில் பழங்குடியினரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிக அளவில் உள்ளது என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம், இசை நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் பேசியது:
உலக அளவில் பழங்குடியினரின் மக்கள்தொகை இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 250 பழங்குடிப் பிரிவினர் 150 மொழிகள் பேசுகின்றனர். இவர்கள் இமயமலை, அரபிக்கடலினுடைய கிழக்குப் பகுதியான கேரளம், கர்நாடகம், நீலகிரி, கொடைக்கானல், திருச்சி பகுதியில் உள்ள கொல்லி மலைகள் போன்ற இடங்களில் வாழ்கின்றனர். பழங்குடியினரின் கலாசாரம் தனித்துவம், பாரம்பரியம் மிக்கது.  தற்போது பழங்குடியினர் இன்றைய கிராமப் பகுதியிலும் வாழ்கின்றனர். தமிழ்நாட்டு நகர்ப்புறங்களில் 9.6 சதவீத பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களுடைய படிப்பறிவு விகிதம் 46.7 சதவீதம். தமிழகத்தில் அவர்களுடைய மக்கள்தொகை 7.9 லட்சமாக உள்ளது என்றார் சுப்பிரமணியன்.
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் சி. ராஜேந்தின் பேசியது: தோல் கருவி, துளை கருவி, நரம்பு கருவி, கஞ்சக் கருவிகள் என நான்கு வகையான இசைக் கருவிகள் உள்ளன.  தோலால் போர்த்தப்பட்டு கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்ட கருவி தோல் கருவி. துளைக் கருவி என்பது மூங்கில் மரத்தில் துளையிட்டு அதன் வழியாகக் காற்று செலுத்தி ஒலியை எழுப்பக்கூடியது. நரம்புக் கருவிகள் என்பது நரம்புகளை இழுத்துக்கட்டி அதன் மூலம் ஒலியை எழுப்பக்கூடிய யாழ், வீணை, தம்புரா போன்றவை. கஞ்சக் கருவிகள் என்பது உலோகத்தால் ஆன இரு தட்டுகளை மோதி, அதனால் ஒலி எழுப்புவதுதான் இந்தக் கஞ்சக் கருவி. அவை தாளம், தப்பாட்டம் போன்றவை என்றார் ராஜேந்திரன்.    
பின்பு கோவை நிமிர்வு பறை இசைக் கலைஞர்களின் பறை, பரதம், துடும்பாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ச. முத்துகுமார், மொழிப் புலத் தலைவர் இரா. முரளிதரன், பழங்குடி மக்கள் ஆய்வு மையத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை, உதவிப் பேராசிரியர் எம்.ஏ. சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
கும்பகோணத்தில் இளைஞர் வெட்டிக் கொலை
ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
267 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பொங்கல் திருவிழா