புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  முழு நேர முதல்வர் நியமிக்கப்படுவாரா?  

By க.கோபாலகிருஷ்ணன்| DIN | Published: 12th September 2018 08:12 AM

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முழு நேர முதல்வர் நியமிக்கப்படாததால்,  வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களும், பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூரில் 1879-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் 1962 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கண்,  பல்,  பிரசவம்,  குழந்தைகள் நலம்,  இதயம், சிறுநீரகவியல், மூளை நரம்பியல், புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட 33 பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த இரு மருத்துவமனைகளையும் ஒரு முதல்வரே நிர்வகித்து வருகிறார்.
மற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய அனுபவமும்,  நிர்வாகத் திறமையும் மிக்க முதல்வர்களை அதிக காலத்துக்கு பணியமர்த்தும் அரசு,  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் குறைந்தகாலத்தில் ஓய்வு பெறுவோரையே 2015 ஆம் ஆண்டு முதல் முதல்வராக நியமித்து வருகிறது.
இப்படி குறைந்த காலத்தில் பணிஓய்வு பெறுவோரை முதல்வராக நியமிப்பதால்,  மருத்துவக் கல்லூரி,  மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் நிர்வாகத்தில் பல்வேறு நிர்வாகச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல்,  பல்வேறு பிரச்னைகளுடன் மருத்துவமனை இயங்கி வருகிறது.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவறை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை.  இருக்கும் கழிவறைகளிலும் தண்ணீர் வராத நிலையும், சுத்தம் செய்யப்படாத நிலையுமே நீடிக்கிறது. நீண்டகாலமாக நிலவும் குடிநீர் மற்றும் மருத்துவத்துக்குத் தேவையான தண்ணீர் பிரச்னையை தீர்க்க வழிவகை செய்யப்படவில்லை. பல்வேறு இடங்களில் மின்சார பிரச்னைகளும் தீர்க்கப்படாமல் உள்ளது.    மருந்துகள் கொள்முதல், தேவையான உபகரணங்கள் வாங்குவது,  மருத்துவமனையின் சிறு சிறு தேவைகளுக்காக வைக்கப்படும் கோப்புகள் கூட நீண்டகாலத்திற்கு கிடப்பில் போடப்படுகிறது. 
மருத்துவமனைக்குத் தேவைப்படும் மருத்துவர்கள்,  செவிலியர்களையும், அதிநவீன உபகரணங்களையும் அரசிடமிருந்து கேட்டுப் பெறுவது என்பது இல்லாத நிலையே நீடிக்கிறது.  
இதுபோல நிறைய பிரச்னைகள் நிலவுவதாக மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும்,  செவிலியர்களும், அலுவலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
தேவை முழுநேர முதல்வர்...: நிர்வாகத் திறமையும், நீண்டகால பணி அனுபவமும் கொண்ட மருத்துவரை குறைந்தபட்சம் ஓராண்டாவது பணியாற்றும் வகையிலான முழு நேர முதல்வராக நியமித்தால்தான் மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, நீர்வாக சீர்கேட்டை சரிசெய்து, சீர்திருத்தத்தை மேற்கொள்ள முடியும் என பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் முதல்வர் ஒருவர் தெரிவித்தார். பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பொதுமக்கள் படும் அல்லல்களை உணர்ந்து அரசு செயலாற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. 

3 ஆண்டுகளில் 10 முதல்வர்கள்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 2015 ஆம் ஆண்டு மகாதேவன் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் முதல்வர் பதவியை வேண்டாம் என்று கூற,  2 மாதங்களுக்கு சங்கரநாராயணன் பொறுப்பு முதல்வராக இருந்தார். அவரே முழு நேர முதல்வராக 7 மாதங்களுக்குப் பணியாற்றினார். சங்கரநாராயணன் பணி ஓய்வு பெற்ற அடுத்த 3 மாதங்களுக்கு சிங்காரவேலு பொறுப்பு முதல்வராகவும், அவர் ஓய்வுபெற்றதும் 7 மாதங்களுக்கு பிச்சை பாலசண்முகம் முதல்வராகவும்,  அவர் ஓய்வுபெற்றதும் ஒன்றரை மாதங்களுக்கு எஸ். இளங்கோவன் முதல்வராகவும்,  அவர் ஓய்வுபெற்றதும் வனிதா மணி 6 மாதங்களுக்கு முதல்வராகவும் இருந்தார்.வனிதாமணி ஓய்வுபெற்றதும் கோபிநாத் 5 மாதங்களுக்கு முதல்வராகவும்,  அவரும் ஓய்வுபெற்ற பின் ஜெயக்குமார் 9 மாதங்களுக்கு முதல்வராக இருந்தார். அவர் ஓய்வுபெற்ற பிறகு எம். இளங்கோவன் 3 மாதங்களுக்கு பொறுப்பு முதல்வராக பதவி வகித்தார். 
இவர் ஓய்வுபெற்ற பின் ஆ. பாரதி என்பவர் தற்போது பொறுப்பு முதல்வராக பதவி வகிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்கதும், அதி முக்கியத்துவம் வாய்ந்ததுமான தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 3 ஆண்டுகளில் குறைந்த மாதங்களில் பணி ஓய்வு பெற்ற 10 பேர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றினர். இதனால் அவர்கள் நிர்வாகத்தின் மீது முழுக்கவனம் செலுத்த முடியவில்லை.

More from the section

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு


பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம்

மாசிமக திருவிழா: குடந்தை பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்ஸவம்
தமிழ்ப் பல்கலை.யில் ஓலைச்சுவடிகள் மின் பதிவேற்றம்
தேச விரோதச் செயல்களை ஆதரிக்கும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: அகில பாரதிய துறவியர் சங்கம் வலியுறுத்தல்