வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

வடகிழக்குப் பருவமழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

DIN | Published: 12th September 2018 08:19 AM

வடகிழக்குப் பருவமழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொ டர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல்.
ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடனான  ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை ஒவ்வொரு துறையும் செய்து முடிக்க வேண்டும்.  
வடகிழக்கு பருவ மழையின்போது பொதுமக்கள் வெள்ளச் சேதம் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.  மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளைச் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
நீரினால் பரவும் நோய்களை தடுக்க தேவையான அளவு குளோரின் கலந்த நீரை மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்தல் வேண்டும்.  
நிவாரண மையங்களான மாநகராட்சி,  நகராட்சி மற்றும் ஊராட்சி அரசுப் பள்ளிகள், சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவ மழை காலத்தில் ஏற்படும் சேதங்கள் குறித்த கணக்குகளை வருவாய் துறையினர் பதிவு செய்ய வேண்டும். 
நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு உரிய பணியாளர்களுடன் ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  பொதுமக்களுக்கு உடனுக்குடன் மருத்துவ வசதி செய்வதற்கு சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸ் உடன் கூடிய  மருத்துவக் குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
போதுமான அளவு மருந்துகள் மற்றும் விஷ முறிவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றார் சக்திவேல். கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

அனுமதியின்றி மதுபானம் விற்ற 6 பேர் கைது
திருவையாறில் தமிழிசை விழா நிறைவு
தஞ்சாவூர், குடந்தையில் ஜனவரி 19 மின் தடை
பாபநாசத்தில் திருவள்ளுவர் தின விழா
காணும் பொங்கல் விழா: பூங்கா, கோயில்களில் திரண்ட மக்கள்