புதன்கிழமை 20 மார்ச் 2019

"நவீன நாடகத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு'

DIN | Published: 19th February 2019 09:35 AM

நவீன நாடகத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்றார் திரைப்படம் மற்றும் ஆவணப் பட இயக்குநர் அம்ஷன்குமார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற  நானும் என் நாடகர்களும் என்ற தலைப்பிலான இரு நாள் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழ் நாடகம் என்பதும்,  நவீன நாடகம் என்பதும் ஒன்றேதான் என்பது நமது புரிதல். தமிழில் எல்லாவற்றுக்கும் 2,000 ஆண்டுகள் பழைமை இருக்கிறது எனக் கூறுவதைப் போலவே தமிழ் நாடகமும் மிகப் பழைமையானது என நாம் கூறுவதில்லை. இசையும், ஆட்டமுமாக நடத்தப்படும் கூத்து நமது பாரம்பரிய நிகழ்கலை. அது, இப்போதும் பாரம்பரியக் கலையாக உள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் மேடை நாடகங்கள் அறிமுகமாகின. நிகழ்த்து வடிவமான மேடை நாடகம் 20 ஆம் நூற்றாண்டில் பல நிலைகளை அடைந்தது. புராணம் மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் நடிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நாடகத்துக்கான தனிப்பட்ட வடிவம் இல்லை. அவற்றை விமர்சித்த ஒரு நாடகமாகத்தான் நவீன நாடகம் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு உருவாகியது. ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயந்தன், பிரபஞ்சன், ஞாநி ஆகியோர் நவீன நாடகங்களை எழுதத் தொடங்கிய முன்னோடிகள் எனக் கூறலாம். 
நவீன நாடகத்துக்குப் பார்வையாளர்களிடம் வரவேற்பு பெருகியுள்ளது. நாடகங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இளைஞர்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், நாடகக் கலைஞர்களாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகின்றனர். 
ஆனால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடத் திட்டமாக இல்லை. புதுச்சேரியில் மட்டும் அது முதுகலை பாடமாக உள்ளது. அதில், பயில்பவர்கள் பலர் நாடகத்தை முன்னெடுத்து செல்பவர்களாக உள்ளனர்.  தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நாடகத்தை ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதில், தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றார் அம்ஷன்குமார்.
இந்த விழாவுக்குத் தலைமை வகித்த துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் பேசியது: இப்பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையையும், நூலகத்தையும் மீண்டும் பழைய பொலிவுக்குக் கொண்டு வர வேண்டும். நாடகத் துறையில் முதுகலைப் பட்டம், பட்டயம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்து நிகழாண்டு தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், நாடகத் துறை நிச்சயமாக உயிர்ப்பிக்கப்படும் என்றார் துணைவேந்தர்.
விழாவில் பேராசிரியர்கள் என்.வி. ராமநரசன், சே. ராமானுஜம் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. நாடகவியலாளர் பிரளயன், முனைவர் இரா. இராசு, தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவர் பெ. கோவிந்தசாமி, கல்வியியல் துறைத் தலைவர் கு. சின்னப்பன், முனைவர் வ. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு