சனிக்கிழமை 23 மார்ச் 2019

மாசி மகம் திருவிழா: கும்பகோணத்தில் 3 கோயில்களின் தேரோட்டம்

DIN | Published: 19th February 2019 09:35 AM

மாசி மகத்தையொட்டி,  கும்பகோணம் மகா மகக் குளக்கரையில் காசி விசுவநாதசுவாமி கோயில், அபிமுகேசுவர சுவாமி கோயில், கெளதமேசுவரர் கோயில் ஆகியவற்றின் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற சிவாலயங்களிலும், பெருமாள் கோயில்களிலும் மாசி மகத்திருவிழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய சிவன் கோயில்களான ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், வியாழசோமேசுவரர், காளஹஸ்தீசுவரர், அபிமுகேசுவரர், கெளதமேசுவரர் ஆகிய 6  சிவன்கோயில்களில் மாசிமக பெருவிழா பிப். 10-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதேபோல, வைணவத் தலங்களான சக்கரபாணி சுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில் ஆகியவற்றில் பிப். 11-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இந்நிலையில்,  ஆதிகும்பேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் ரத வீதியுலாவும், காசி விசுவநாதசுவாமி கோயில், அபிமுகேசுவர சுவாமி கோயில், கெளதமேசுவரர் கோயில் ஆகிய மூன்று சிவன் கோயில்களின் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை மகாமக குளக்கரையிலும் நடைபெற்றன. இதேபோல வியாழசோமேசுவரர் கோயில் தேரோட்டம் அந்த கோயிலை சுற்றியும் திங்கள்கிழமை மாலை  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு சக்கரபாணிசுவாமி கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர், கொட்டையூர் கோடீசுவர சுவாமி கோயில், பாணபுரீசுவரர் கோயில், சாக்கோட்டை அமிர்த கலசநாதர், ஏகாம்பரேசுவரர்,  நாகேசுவரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 6 சிவன் கோயில்களில் இருந்தும், சுவாமி, அம்பாள் மகாமகக் குளக்கரையில் பகல் 12 மணிக்கு எழுந்தருளியதும், அந்தந்த கோயில் அஸ்திரதேவருக்கு அபிஷேகமும், தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

More from the section

அதிராம்பட்டினத்தில் ஜமாஅத் புதிய  நிர்வாகிகள் தேர்வு
கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்


8 மூட்டை பூஜை உபகரணங்கள், ரூ.2.39 லட்சம் பறிமுதல்

வலங்கைமான் கோயில் விழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
குறைந்தபட்ச கூலி வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை