புதன்கிழமை 20 மார்ச் 2019

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்: வைகோ

DIN | Published: 19th February 2019 09:34 AM

ஸ்டெர்லைட் ஆலையை இனிமேல் எந்நாளும் திறக்க விடமாட்டோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகள் போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளேன். இந்த நாட்டில் நீதியும், ஜனநாயகமும் காப்பாற்றப்படும். மக்களைக் காக்கும் தெய்வங்களாக நீதிபதிகளை மக்கள் கருதுகின்றனர். 
உயர் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இனிமேல் உயர் நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செல்லும். ஆனால், நாங்கள் விடமாட்டோம். ஆலையை எந்நாளும் திறக்க விடமாட்டோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகக் காவல் துறையினரை கூலிப்படையாகத் தமிழக அரசு அனுப்பி வைத்து, 13 பேரைச் சுட்டுக் கொன்றது. அதிமுக அரசின் இரட்டை வேடம் கலைந்தது. நூறு நாட்களாகப் போராடிய மக்கள் மட்டுமல்லாமல், 13 உயிர்கள் சிந்திய ரத்தம் இந்த ஆலையை மூட வைத்துள்ளது. 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நிகழ்ந்த கலவரம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் உடைத்தது உள்ளிட்டவை தொடர்பாக சுற்றுச்சூழல் போராளி முகிலன் அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, அவர் சென்னையிலிருந்து பிப். 15-ம் தேதி இரவு நாகர்கோவில் விரைவு ரயிலில் ஏறினார். நள்ளிரவு 1.15 மணி வரை அவரது செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைத்தது. அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. முகிலன் காணாமல் போனதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகமும், தமிழ்நாடு காவல் துறையும்தான் காரணம் என்றார் வைகோ.
இதையடுத்து, மக்களுக்கு வைகோ இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், விவசாய அணி செயலர் ஆடுதுறை முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு