வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

தமிழ்ப் பல்கலை.யில் ஓலைச்சுவடிகள் மின் பதிவேற்றம்

DIN | Published: 20th February 2019 09:06 AM

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகளை மின் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யரின் 165 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, இப்பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய சுவடியியல் பயிலரங்கத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கக்கூடிய சுவடிச் சேகரிப்பு மையங்களில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் சுமார் 8,000 ஓலைச்சுவடிகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணச் சுருணைகளையும் கொண்டுள்ளது. இங்கு மின் பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெறுகிறது. 2,500 ஓலைச்சுவடிகள் மின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கல்வெட்டுகளில் எழுதப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு வகையான சுவடிகளில் எழுதினர். பிறகு அச்சுத்தாள் வந்தது. அச்சுத்தாளுக்குப் பிறகு அச்சுத்தாளைக் கையால் எழுதிய காலம் போய் தட்டச்சுச் செய்தோம். தட்டச்சிலிருந்து கணினியில் எழுதுகிறோம். தற்போது நாம் பேசுவதைக் கணினி எழுதித் தருகிறது. எதிர்காலச் சந்ததியினர் கையால் எழுதுவார்களா என்பது கேள்விக்குறி. 
ஆனால், மொழி வளர்ந்து கொண்டே இருக்கிறது. மொழியை எழுதக்கூடிய அந்தத் தொழில்நுட்பமும் மாறிக் கொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் மாறியவுடன் அந்தப் பழைய தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்துவோர் குறைந்துவிடுகின்றனர்.
கல்வெட்டுகளில் எழுதப்பட்ட எழுத்துகளைப் படிப்பது என்பது அனைவராலும் முடியாது. அதைப் படிப்பதற்குச் சிலர் தேவைப்படுகின்றனர். ஓலைச்சுவடியில் எழுதியதைப் படிப்பதற்கு அறிஞர்கள் தேவை. ஓலைச்சுவடிகள்பல வகை அறிவுச் செல்வங்களை உள்ளடக்கி இருக்கிறது. அந்த ஓலைச்சுவடிகளைப் படித்து நாம் தெரிந்து கொள்வதற்கான பயிற்சிதான் இப்பயிலரங்கம் என்றார் துணைவேந்தர்.
விழாவில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்புரையாற்றினார். சுவடிப் புலத் தலைவர் பா. ஜெயக்குமார், ஓலைச்சுவடித் துறைத் தலைவர் மோ.கோ. கோவைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதைய்யரின் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு துணைவேந்தர் மாலை அணிவித்தார்.
 

More from the section

ஜி.ஆர்.மூப்பனார் உடல் தகனம்: மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும் 
திமுக வேட்பாளருக்கு அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வாழ்த்து
வேட்பாளர்களின் செலவினங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் செலவின பார்வையாளர் பேச்சு
பொள்ளாச்சி சம்பவம்: மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்