24 மார்ச் 2019

தேச விரோதச் செயல்களை ஆதரிக்கும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: அகில பாரதிய துறவியர் சங்கம் வலியுறுத்தல்

DIN | Published: 20th February 2019 09:06 AM

தேச விரோத செயல்களை ஆதரிக்கும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரதிய துறவியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாசி மக விழாவையொட்டி கும்பகோணத்தில் அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில் துறவியர் சங்கமம் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மத சார்பற்ற நாடு எனப்படும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மதம் மாற்றும் நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெறுகிறது. இதை வன்மையாகக் கண்டிப்பதுடன்,  தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து,  தமிழகத்தில் உள்ள தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் சில கட்சி தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும்,  இந்திய நலனுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்துக்கு எதிராகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது.
அரசு மட்டுமே முயற்சி செய்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும் என நாம் காத்திருக்கக் கூடாது. பொதுமக்களும் தினமும் நடக்கும் தீவிரவாத சம்பவங்கள், மதம் மாற்றும் பிரசாரங்கள், இந்து தர்மத்துக்கு எதிரான பேச்சுகள் போன்றவற்றை உன்னிப்பாகக் கவனித்து, இதுபோன்ற தேச விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சியினரை கண்டறிந்து தேர்தல் நேரத்தில் புறக்கணிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி கேரள முதல்வர் சபரிமலை மீதான இந்துக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்தார். சேலம் ஸ்ரீமத் சுவாமி திவ்ய நாமானந்த மகராஜ் மாநாட்டு கொடியை ஏற்றினார். சுவாமி ராமானந்தா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். 
பாதரக்குடி ரவீந்திர தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை திருப்பாத சுவாமிகள், சென்னை சுவாமி தாம்பரானந்தா, சேலம் சின்மயா மிஷன் சுவாமி சாய் விதானந்தா, உத்தண்டி சுவாமி ஈஸ்வரானந்தா, உளுந்தூர்பேட்டை யதீஸ்வரி நித்ய விவேகப்ரியாம்பா, சுவாமி வேதாந்த ஆனந்தா, குத்தாலம் வீரராகவ சுவாமிகள் உள்பட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல ஊர்களில் இருந்து சாதுக்கள், துறவிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டை முன்னிட்டு சதுர்வேத பாராயணம், சைவத்திருமுறை பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, லலிதா சகஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், பஜனை, சத்சங்கம், கலை நிகழ்ச்சிகள், சிவ தாண்டவ நடனம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர், கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறையிலிருந்து ஆன்மிக கலாசார ஊர்வலம் தொடங்கி மகாமகக் குளத்தில் முடிந்தது. அங்கு, நீர்நிலைகள் வற்றாமல் இருக்கவும், நாட்டில் அமைதி நிலவவும் வேண்டி மகா ஆரத்தி நடைபெற்றது.

More from the section

தஞ்சை - திருச்சி  ரயில் மின்பாதையில் சோதனை ஓட்டம்
வேட்பாளர்களின் செலவின விவரங்கள் கண்காணிப்பு
பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து
இளைஞர் தற்கொலை
நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழியேற்பு