திங்கள்கிழமை 25 மார்ச் 2019

தஞ்சாவூரில் பிப். 23-இல் தி.க. மாநாடு தொடக்கம்

DIN | Published: 21st February 2019 09:40 AM

தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக மாநில மாநாடு பிப். 23-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலர் வீ. அன்புராஜ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:
தஞ்சாவூர் திலகர் திடலில் பிப். 23-ம் தேதி காலை 10.30 மணியளவில் மாநாடு தொடங்குகிறது. இதில், சமூக நீதி வரலாற்றுக் கண்காட்சியைப் பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் இரா. கெளதமன் திறந்து வைக்கிறார். பகல் 11.30 மணியளவில் தந்தை பெரியார், நாகம்மையார், மணியம்மையார் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
நண்பகல் 12 மணியளவில் மத்திய பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் - ஏன்? என்ற தலைப்பில் கருத்தரங்கமும், பிற்பகல் 2 மணியளவில் மாநாட்டுத் தீர்மான அரங்கமும் நடைபெறவுள்ளது. பின்னர், மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து ஆற்றுப்பாலம், காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழ வாசல், கொண்டிராஜபாளையம், கீழ வீதி, வடக்கு வீதி வழியாக திலகர் திடல் வரை பேரணி நடைபெறும்.
மாலை 5 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு முன்னோட்டக் கருத்தரங்கம், இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை மாநாட்டு நிறைவு அரங்கம் நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகின்றனர். இரவு 9.30 மணியளவில் வீதி நாடகம் நடைபெறும்.
பிப். 24-ம் தேதி காலை 8.30 மணியளவில் சமூக நீதி மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாநாட்டைத் திறந்து வைக்கிறார். பின்னர், அம்பேத்கர், அண்ணா, காமராசர், கருணாநிதி ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. நண்பகல் 12 மணியளவில் தீர்மான அரங்கம், பிற்பகல் 2 மணியளவில் இசை நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணியளவில் புரட்சிப் பூபாளம் படைப்போம் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மாலை 4 மணியளவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் பேசுகின்றனர்.
 

More from the section

தஞ்சை - திருச்சி  ரயில் மின்பாதையில் சோதனை ஓட்டம்
வேட்பாளர்களின் செலவின விவரங்கள் கண்காணிப்பு
பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து
இளைஞர் தற்கொலை
நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழியேற்பு