வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்காவிடில் போராட்டம்: மீனவர் சங்கம் அறிவிப்பு

DIN | Published: 21st February 2019 09:39 AM

புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
மல்லிப்பட்டினம், சேதுபாவசத்திரம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு,  விசைப்படகு மீனவர் பேரவை மாநிலச் செயலர் அ.தாஜுதீன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் ஆ.ராஜமாணிக்கம், செயலர் க.வடுகநாதன், நிர்வாகிகள் செல்வக்கிளி, மருதமுத்து, இப்ராஹிம், சேக்தாவுது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
2018,  நவம்பர் 16 ஆம் தேதி வீசிய  கஜா புயலால், தஞ்சை மாவட்டத்தில்  188 விசைப்படகுகள் முழுமையாகவும், 54 படகுகள் பகுதி அளவிலும் சேதமடைந்தன. 2004ஆம் ஆண்டு அரசாணைப்படி, முழுமையாக மற்றும் பகுதி சேதமடைந்த படகுகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு குறைவான நிவாரணத் தொகையே வழங்கப்பட்டுள்ளது.  எனவே அரசு  அறிவித்த நிவாரணத் தொகையான ரூ.3 லட்சத்தை வழங்க வேண்டும்.
முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த ரூ.5 லட்சத்தில் பழைய படகு கூட வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே,  தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். 
மல்லிப்பட்டினம் புதிய துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்காததால்தான், அலைகளின் நேரடி தாக்குதலில் சிக்கி படகுகள் அதிகளவில் சேதமடைந்தன. 
எனவே, அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்த தூண்டில் வளைவு அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச்  5-ஆம் தேதி இப்பகுதி  மீனவர்களை திரட்டி மல்லிப்பட்டினம் - சேதுபாவாசத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபடுவது எனவும், அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்ட தலைநகரங்களில்  மார்ச் 15 ஆம் தேதி  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More from the section

ஜி.ஆர்.மூப்பனார் உடல் தகனம்: மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும் 
திமுக வேட்பாளருக்கு அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வாழ்த்து
வேட்பாளர்களின் செலவினங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் செலவின பார்வையாளர் பேச்சு
பொள்ளாச்சி சம்பவம்: மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்