24 மார்ச் 2019

மத மோதல்களை உருவாக்கினால் போராட்டம்: பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் முடிவு

DIN | Published: 21st February 2019 09:39 AM

மத மோதல்களை உருவாக்க மதவாத சக்திகள் முயற்சி செய்தால் போராட்டம் நடத்துவது என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், திருபுவனத்தில் பிப். 5-ம் தேதி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
மேலும், இக்கொலையில் அரசியல் ஆதாயம் அடைவதற்காக மக்கள் மத்தியில் இந்து அமைப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தி, மத மோதலை உருவாக்கத் திட்டமிட்டு முயற்சி செய்து வருகின்றன. கும்பகோணம், திருபுவனம் மற்றும் டெல்டா  பகுதிகளில் மத மோதலை உருவாக்க நினைக்கும், மதவெறி சக்திகளுக்கு இரையாகாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும். மத மோதலை உருவாக்க நினைக்கும் மதவாத சக்திகளை ஒடுக்க வேண்டும்.
ராமலிங்கம் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் தமிழக அரசும், காவல் துறையும் நீக்க வேண்டும். மத மோதலை ஏற்படுத்த மதவாத சக்திகள் முயற்சி செய்தால், அனைத்து கட்சிகள் சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக வடக்கு மாவட்டச் செயலர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலர் சா. விவேகானந்தன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முகமது செல்லப்பா, திராவிட கழக மாவட்டத் தலைவர் கெளதமன், நீலப்புலிகள் இயக்கத் தலைவர் இளங்கோவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் குடந்தை ஜாபர், தமிழ்தேச மக்கள் முன்னனி அருண்சோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

தஞ்சை - திருச்சி  ரயில் மின்பாதையில் சோதனை ஓட்டம்
வேட்பாளர்களின் செலவின விவரங்கள் கண்காணிப்பு
பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து
இளைஞர் தற்கொலை
நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழியேற்பு