திங்கள்கிழமை 25 மார்ச் 2019

மொழி வளர்ச்சிக்கு சொற்களஞ்சியம் அதிக அளவில் தேவை: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் பேச்சு

DIN | Published: 21st February 2019 09:40 AM

மொழி வளர வேண்டுமானால்,  சொற்களஞ்சியம் அதிக அளவில் பெருக வேண்டும் என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.
இப்பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்புத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மொழி வளர்ச்சியில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
தமிழ் வளர்ந்த மொழியா, வளர்ந்து வரும் மொழியா, வளராத மொழியா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழ் மொழி வளரவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வளர்ந்த மொழி என்பது அனைத்து தளங்களிலும் நாம் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். அப்போதுதான் அது வளர்ந்த மொழியாகும். தமிழ் மொழியை நாம் வீட்டில், கல்வி நிலையங்களில், அலுவலகங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால், அறிவியல் தமிழாக நாம் பயன்படுத்தவில்லை. பொறியியல், மருத்துவப் படிப்புகளில் தமிழைப் பயன்படுத்த முடியுமா என்பதற்கு முழுமையான விடையில்லை. அந்த அளவுக்கு நம் மொழி வளரவில்லை.
மொழிபெயர்ப்பு என்பது மொழித் தொடர்பின் விளைவு. மொழிபெயர்க்கும்போது நம் மொழி அமைப்பு மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
ஒரு மொழி வளர வேண்டுமானால், அந்த மொழியினுடைய சொற்களஞ்சியம் பெருக வேண்டும். அனைத்து வகையான அறிவியலையும் சொல்வதற்கு ஏற்ற சொற்களை உருவாக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எழுதுவதற்குத் துல்லியமான வெளிப்பாட்டுத் தன்மை வேண்டிய அளவு உருவாகவில்லை. 
தேவையற்றக் கூறுகளை ஒதுக்கிவிட்டு, அறிவியல் ரீதியாகத் தமிழை நாம் மாற்ற வேண்டும். 
மொழியை நாம் தேவையான அளவு செதுக்கி, அறிவியல் மொழியாக மாற்றி, சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லக்கூடிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்றார் துணைவேந்தர்.
முனைவர் பழனி. அரங்கசாமி, ஆட்சிக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். 
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ப. ராஜேஷ், மொழிபெயர்ப்புத் துறை இணைப் பேராசிரியர் செள. வீரலெஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

தஞ்சை - திருச்சி  ரயில் மின்பாதையில் சோதனை ஓட்டம்
வேட்பாளர்களின் செலவின விவரங்கள் கண்காணிப்பு
பேராவூரணியில் தேர்தல் விழிப்புணர்வு மொய் விருந்து
இளைஞர் தற்கொலை
நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழியேற்பு