புதன்கிழமை 20 மார்ச் 2019

இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது

DIN | Published: 22nd February 2019 09:19 AM

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இளைஞர் மர்மச் சாவு வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 
அய்யம்பேட்டை காவல் சரகம்,  சக்கராப்பள்ளி ஹவ்வா நகரை சேர்ந்த மைதீன் பாட்சா மகன் சாகுல் ஹமீது (27). இவர் சக்கராப்பள்ளியில் செல்லிடப் பேசி கடை நடத்தி வருகிறார். இவரது தம்பி பைசல் ரகுமான் (23). அண்ணனுக்கு உதவியாக கடையில் உதவி செய்து வந்தார். சாகுல் ஹமீதுக்கும் அவரது கடை அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணிற்கும் இடையே முறைகேடான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் அந்தப் பெண்ணுடன் சாகுல்ஹமீது தலைமறைவானார்.
இந்நிலையில், பைசல்ரகுமான் திடீரென ரத்த வாந்தி எடுத்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். 
இதுகுறித்து பைசல் ரகுமானின் தாய் மும்தாஜ் அய்யம்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். இதில்,  பைசல் ரகுமானுக்கு சிலர் விஷம் கலந்த பிஸ்கட்டை கொடுத்து அவரை கொலை செய்து விட்டதாகவும்,  அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸாரின் விசாரணையில் பைசல்ரகுமான் கொல்லப்பட்டது தெரிய வந்ததையடுத்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதையடுத்து,  தலைமறைவான அந்தப் பெண்ணின் உறவினர்களான  சக்கராப்பள்ளி சாதிக்பாட்சா(52), அப்துல் சமது (26), அய்யம்பேட்டை அப்துல் மஜீத் (45), மேல வழுத்தூர் சையது மதானி(33), மாத்தூர் டேனி(40) ஆகிய 5 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

More from the section

ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்
சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு