வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

நவ.1 முதல் காகிதமற்ற கருவூலங்கள்: ஆணையர்

DIN | Published: 11th September 2018 09:16 AM

தமிழகத்தில் உள்ள அனைத்து கருவூலங்களும் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படவுள்ளது. இதற்கான திட்டம் நவ.1 முதல் அமலுக்கு வருவதாக கருவூலக் கணக்குத்துறை ஆணையரும், முதன்மைச் செயலருமான தென்காசி  சு. ஜவஹர் தெரிவித்தார்.
திருச்சி மண்டலத்துக்குள்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலக எல்லைக்குள்பட்ட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் இந்த புதிய திட்டம் தொடர்பான பயிற்சி மற்றும் திறனூட்டல் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து கருவூலக் கணக்குத்துறை ஆணையர் தென்காசி  சு. ஜவஹர் கூறியது: தமிழ்நாடு நிதித்துறையின் கீழ், 1962 முதல் கருவூலம் மற்றும் கணக்குத்துறையானது தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக தமிழக அரசின் வரவு, செலவு கணக்குகளை நிர்ணயித்து வருகிறது.
2017-18ஆம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.1.55 லட்சம் கோடி வரவும், ரூ.1.70 லட்சம் கோடி செலவும் கருவூலத் துறை மூலம் நடைபெற்றுள்ளது. இதில், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள், இன்சூரன்ஸ் மற்றும் இதர சேவை பணி நிமித்தம் மூலம் 52 லட்சம் வாடிக்கையாளர்களையும் கையாண்டு வருகிறது.
இவர்களது பணப்பட்டுவாடாவை கையாளுவதற்கு ஒரு மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு குறைந்தது 5 டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பல்வேறு துறைகளில் பணியில் உள்ள பணம் பெற்றும் வழங்கும் பணியாளர்கள் 29 ஆயிரம் பேர், அவர்களுக்கான தலா 2 உதவியாளர்கள் என மொத்தம் 1 லட்சம் பேர் கடும் பணிச்சுமைகளுக்கு இடையே பட்டுவாடா பணியை செய்து வருகின்றனர்.
இவர்களின் பணிச்சுமையை குறைக்கவும், காகிதங்கள் பயன்பாட்டை குறைத்து கணினிமயமாக்கவும், அவரவர் அலுவலகத்தில் இருந்து கொண்டே பட்டுவாடா தொடர்பான பணிகளை நிமிடங்களுக்குள் முடிக்கவும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் என்ற இந்த புதியத் திட்டத்தின்படி 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளும் கணினிமயமாக்கப்படடுள்ளன. இதேபோல், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், கருவூலம் மூலம் பயன் பெறும் இதர பயனாளர்கள் விவரங்களும் கணினிமயமாக்கப்படுகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் அக்டோபர் இறுதிக்குள் முடிவு பெறும். நவ.1ஆம் தேதி முதல் கருவூலங்களில் காகித பயன்பாடே இல்லாமல் கணினிமயமாகும்.
இந்தத் திட்டத்தில் வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, அனைத்து துறைகள், கருவூலங்கள், பயனாளர்களின் வங்கிக் கணக்குகள் முழுவதும் கணினியில் இணைக்கப்பட்டு இருந்த இடத்திலேயே தகவல்களையும், பணப்பரிவர்த்தனையையும் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு கடத்திச் செல்ல முடியும். பணிப்பதிவேடு மாயமாகாது. காலையில் வழங்கும் ரசீதுகளுக்கு மாலையில் பணம் கிடைக்கும். ஒவ்வொரு துறையினரும் கருவூலம் வர வேண்டிய கட்டாயம் இருக்காது. காத்திருப்பும் இருக்காது. இத்திட்டத்துக்காக அரசு ரூ.288.91 கோடியை ஒதுக்கி 3 தனியார் கணினி நிறுவனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கருவூலத்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆவண செய்துள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கருவூலத்துறை அலுவலர்களே தனியாக கையாளும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இக் கூட்டத்தில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் ஏ.பி. மகாபாரதி, திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு, ஆட்சியர் கு.ராசாமணி, வருமான வரித்துறை துணை ஆணையர் எஸ்.எம். சுரேந்திரநாத், மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், முதன்மை வனப் பாதுகாவலர் யோகேஷ் சிங், மாவட்ட வன அலுவலர் சி. வித்யா, சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம், கருவூல மண்டல இணை இயக்குநர்கள் கே. பழனிசாமி, டி. செல்வசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

More from the section

திருச்சியில் ஜனவரி 23-இல் தேசம் காப்போம் மாநாடு : திருமாவளவன் பேட்டி
நடுவிக்கோட்டையில் திருவள்ளுவர் தினவிழா
காதலியுடன் வந்த கல்லூரி மாணவர் குத்திக் கொலை
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26.78 லட்சம் கரன்சி,  தங்க நகைகள் பறிமுதல்
புத்தாநத்தத்தில் ஞானவேல் முருகன் ரதயாத்திரை