புதன்கிழமை 16 ஜனவரி 2019

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல்; 485 பேர் கைது

DIN | Published: 11th September 2018 09:16 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட  இடதுசாரிகளின் கூட்டுக் குழுவைச் சேர்ந்த 485 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து  நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் தெரிவித்திருந்தன. 
இந்நிலையில்,  இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) ஆகியவை இணைந்த  இடதுசாரிகளின் கூட்டுக் குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி காந்தி மார்க்கெட் வளைவுப் பகுதியிலிருந்து மாவட்டச் செயலர்கள்  ராஜா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏ.கே. திராவிடமணி (இந்திய கம்யூனிஸ்ட்), தேசிகன் (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) ஆகியோர் தலைமையில் இடதுசாரிகளின் கூட்டுக் குழுவினர் ஊர்வலமாக மரக்கடையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும்,  இடதுசாரிகளின் கூட்டுக் குழுவினருக்கும் இடையே வாக்குவாதமும், அதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
எனினும் தடையை மீறிச் சென்ற கூட்டுக் குழுவினர், சாலையில் அமர்ந்து அந்த வழியாக வந்த  அரசுப் பேருந்து முன்பு படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த குண்டுகட்டாகத் தூக்கி வேனில் ஏற்றினர். முன்னதாக சில இளைஞர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் உதவி ஆணையர் கோடிலிங்கம் அப்பகுதிக்கு விரைந்து சென்று  வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி  வேனில் ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், வெற்றிச்செல்வன்,   சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சம்பத், ரங்கராஜன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர்கள் எம். செல்வராஜ், க.சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் சிவா,  முருகன்,  இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் சேதுபதி,  ஏஐடியுசியின் செல்வகுமார் உள்ளிட்ட  23 பெண்கள் உள்பட  228 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண 
மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நெ.1. டோல்கேட்டில்:   கொள்ளிடம் நெ.1. டோல்கேட்டில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை. சிவசூரியன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவெறும்பூரில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தாலுகா செயலர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி தாலுகா துணைச் செயலர் சுப்பிரமணி தலைமையில்  மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மணப்பாறையில்...
மணப்பாறையில் திங்கள்கிழமை பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. மேலும், இந்திய கம்யூ. கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை ஊர்வலமாக வந்த 10 பெண்கள் உள்பட 67 பேரைப் போலீஸார் கைது செய்தனர். தமிழர் தேசிய முன்னணி கட்சி பிரமுகர் உலகநாதன், இருசக்கர வாகனத்துக்கு மலர் மாலையிட்டு தட்டு வண்டியில் ஏற்றி காமராஜர் சிலையில் இருந்து புதுத்தெரு, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை திடல் வரை நகர் வலம் வந்தார்.
 

More from the section

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26.26 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகை: உரமில்லா கரும்பை விரும்பாத மக்கள்!
குண்டூரில் சூழல் பொங்கல் விழா


எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினருக்கு அழைப்பு