புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

பொது வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை!

DIN | Published: 11th September 2018 09:17 AM

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இதரக் கட்சிகள் திங்கள்கிழமை  நடத்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. பேருந்து, ரயில் சேவைகள் வழக்கம்போல இயங்கின.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால்,  அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகுவதாகக் கூறி,   உயர்த்தப்பட்ட பொருள்களின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு திருச்சியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை.   திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்து புறநகர் மற்றும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. இந்த பேருந்து நிலையங்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல புறப்பட்டுச் சென்றன.  மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனத்தையும் போலீஸார் நிறுத்தி
வைத்திருந்தனர்.


காந்தி மார்க்கெட்டில்...
திருச்சி காந்தி மார்க்கெட்டிலுள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், வெங்காயக் கடைகள் உள்ளிட்ட இதரப் பொருள்களுக்கான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் வழக்கம்போல வியாபாரம் நடைபெற்றது. மற்ற நாள்களைக் காட்டிலும் கூட்டம் குறைவாக இருந்தாலும், கடைகளில் தொடர்ந்து வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சில இடங்களில் கடைகள் அடைப்பு 
பெரியக்கடைவீதி, சின்னக்கடைவீதி, என்எஸ்பி சாலை, பர்மா பஜார் பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.  இதுபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன்,  கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், திமுக பகுதிச் செயலர் ராம்குமார் உள்ளிட்டோர்,  பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி  கூறியதைத் தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கெடுத்து கொண்டனர். ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை 
பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடாததால் பேருந்துகள் சேவையில் எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை. அனைத்துபணிமனைகளிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன.  மேலும், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநகரில் வழக்கம்போல ஆட்டோக்கள் இயங்கின. இதுபோல, ரயில் சேவையிலும்எந்தவித பாதிப்பும் இல்லை. 
திருச்சி மாநகரில் தில்லைநகர், தென்னூர், உறையூர்,  காந்தி மார்க்கெட், பாலக்கரை, கண்டோன்மென்ட், பீமநகர்,  டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், பழைய பால்பண்ணைப் பகுதி, தஞ்சாவூர் சாலை உள்ளிட்ட மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனங்களில் வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்றது.
முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிப்பு
திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், காந்தி மார்க்கெட் , முக்கியச் சந்திப்பு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், காவல்துறையினர் ரோந்து வாகனத்திலும் மாநகர்ப் பகுதிகளைச் சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரைப் போன்று புறநகர்ப் பகுதிகளிலும்  வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.    மாவட்டத்தில் திருவெறும்பூர், துவாக்குடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, புள்ளம்பாடி போன்ற பல்வேறு பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல விற்பனை நடைபெற்றது. அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம்போல இருந்தது. பேருந்து சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
 

More from the section

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
இலவச கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி
ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
மது போதையில் தகராறு: இருவர் குத்திக் கொலை