சனிக்கிழமை 23 மார்ச் 2019

ரூ. 16.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடைகள் திறப்பு

DIN | Published: 22nd February 2019 09:13 AM

திருச்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 16.80 லட்சத்தில்  கட்டப்பட்ட இரு புதிய நியாயவிலைக் கடைகளை மக்களவை உறுப்பினர் ப. குமார் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
மேலகல்கண்டார் கோட்டை பகுதிக்கு உள்பட்ட விவேகானந்தா நகர், அர்ஜுனன் நகரில்  ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட புதிய  நியாய விலைக் கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வியாழக்கிழமை அவர் திறந்து வைத்து பேசியது : பொங்கல் பரிசாக குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் தமிழக முதல்வர் ரூ. 1000 வழங்கினார். மத்திய அரசு,  விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் தர உத்தரவிட்டுள்ளது. இது விவசாயத்தை ஊக்கப்படுத்துவது போல் ஆகும். தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக முதல்வர்  ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுமென்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும். அதன் படி திருச்சி மாநகரில் 32 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். ஆனால் தற்போது திருச்சி மாநகரில் 10 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே உள்ளன. எனவே மாநகராட்சி ஊழியர்கள் 22 ஆயிரம் குடும்பங்களை புதிதாக சேர்க்க உள்ளனர். அதில் தகுதி உள்ளவர்கள் அனைவரும் பயன் அடையவேண்டும். திருச்சி மாவட்டத்தின் முக்கியமான பிரச்னை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்டவைகள் தான். அதை மத்திய அரசிடம் பேசி விரைவில் நிறைவேற்றுவோம். மத்தியில்  பாஜக நல்லது செய்தால் ஏற்போம், மாறாக  மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் எதிர்ப்போம்.  தற்போது மக்களவைத் தேர்தல் வர உள்ளது.  யார் வந்தால் நல்லது நடக்கும் என்பதை யோசித்து அதிமுக கூட்டணிக்கே  வாக்களியுங்கள் என்றார். 
விழாவில் பொன்மலை பகுதிச்  செயலாளர் பாலசுப்பிரமணியன், காட்டூர் பகுதி செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More from the section

மக்களின் ஆரவாரமே திமுகவின் வெற்றிக்கு அடையாளம்
பெரம்பலூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை  
திமுகவில் இணைந்தார் வி.பி. கலைராஜன்
திருச்சியில் வாகன சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல்
மார்ச் 23, 24இல் திருச்சியில் தினமணி கல்விக் கண்காட்சி-2019