திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

என்எல்சிக்கு நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

DIN | Published: 14th December 2018 08:51 AM

என்எல்சி பழுப்பு நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் அளவீடு செய்ய வானாதிராயபுரம் கிராமத்துக்கு வியாழக்கிழமை வந்த அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்எல்சி இந்தியா நிறுவனம், மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் புதிய சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிலம், வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
 இந்த நிறுவனம் பழுப்பு நிலக்கரி எடுக்க 3-ஆவது சுரங்கம் அமைப்பதற்காக, மந்தாரக்குப்பத்தில் அண்மையில் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற விவசாயிகள், கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்துக்காக தங்களது நிலம், வீடுகளை வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.
 இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வட்டம், வானதிராயபுரம் கிராமத்தில் சுரங்கம்-1ஏ அருகே உள்ள பகுதிகளைக் கையகப்படுத்த அந்தப் பகுதி மக்களுக்கு என்எல்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிகிறது. அதன்பேரில், நெய்வேலி (நிலம் எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர், குறிஞ்சிப்பாடி வருவாய்த் துறையினர் இணைந்து வானதிராயபுரம் கிராமத்தில் நிலம் அளவீடு செய்ய காவல் துறையினருடன் வியாழக்கிழமை வந்தனர்.
 இதையறிந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது (படம்). அவர்களிடம், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதேபோல, தென்குத்து கிராமத்துக்கு புதன்கிழமை நில அளவீடு மேற்கொள்ள சென்ற அதிகாரிகளும் அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பால் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

More from the section

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்


மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் ரூ.2.68 கோடி இடுபொருள் மானியம் விநியோகம்: மாவட்ட ஆட்சியர்

சித்த வைத்தியர்கள் மாநாடு
மாநில குத்துச் சண்டைப் போட்டி: கடலூர் மாணவர்கள் சிறப்பிடம்


வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி பூஜை