திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மார்கழி ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று கொடியேற்றம்

DIN | Published: 14th December 2018 08:43 AM

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (டிச.14) தொடங்குகிறது.
 உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன.
 அதன்படி, நிகழாண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவம் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உத்ஸவ ஆச்சாரியார் எஸ்.ஆர்.நடராஜ தீட்சிதர் கொடியேற்றி வைக்கிறார்.
 விழாவில், டிச.18-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா நடைபெறுகிறது. இதேபோல, 19-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 20-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 21-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெடடுக் குதிரையில் வீதி உலா நடைபெறுகிறது. 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
 தொடர்ந்து காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
 24-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உத்ஸவம் முடிவடைகிறது. விழா நாள்களில் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித் சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உத்ஸவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலர் ஜெ.ந.நடராஜ தீட்சிதர், துணைச் செயலர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.
 

More from the section

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்


மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் ரூ.2.68 கோடி இடுபொருள் மானியம் விநியோகம்: மாவட்ட ஆட்சியர்

சித்த வைத்தியர்கள் மாநாடு
மாநில குத்துச் சண்டைப் போட்டி: கடலூர் மாணவர்கள் சிறப்பிடம்


வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி பூஜை