செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

சிதம்பரம், பண்ருட்டி பகுதிகளில் சாலை மறியல்

By  சிதம்பரம்/நெய்வேலி,| DIN | Published: 11th September 2018 09:19 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
 சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு பேருந்துகள், சில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. சிதம்பரம் காந்திசிலை அருகே இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமையில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலைய முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இதேபோல, சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
 காட்டுமன்னார்கோவிலில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. திமுக கட்சி அலுவலகத்திலிருந்து அந்தக் கட்சியின் ஒன்றிய செயலர் எ.முத்துசாமி தலைமையில் திமுக, காங்கிரஸ், விசிக, தவாக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற திமுக நகரச் செயலர் எஸ்.கணேசமூர்த்தி, அவைத் தலைவர் ஆர்.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் பி.ராமலிங்கம், பொருளாளர், ஆர்.சண்முகம், காங்கிரஸ் சார்பில் மணிமொழி, நஜிர்அகமது, அன்வர், இளங்கீரன், பாபு, ஹிதாயத்துல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மணவாளவன், ராவணன், நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் ஆகிய கட்சியினர் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில், நகரச் செயலர் இளங்கோவன் முன்னிலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 76 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 பண்ருட்டி பகுதியில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின. போராட்டத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உதயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக் குழு பி.துரை ஆகியோர் தலைமையில் கட்சியினர் 100 பேர் பயணியர் விடுதியில் இருந்து பேரணியாக வந்தனர். பின்னர், நான்கு முனைச் சந்திப்பில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 86 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு பிரிவினர் நகரச் செயலர் சக்திவேல் தலைமையில் ஊர்வலமாக வந்து நான்கு முனைச் சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீஸார் கைது செய்தனர். வடலூர், குறிஞ்சிப்பாடியில் சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வடலூரில் உணவகங்கள் மூடியிருந்ததால் சுற்றுலாப் பணிகள் சிரமப்பட்டனர்.
 குறிஞ்சிப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் மணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகரச் செயலர் பாலமுருகன் தலைமையில், மெயின் பஜாரில் இருந்து பேரணியாக வந்து வட்டம் 19-இல் உள்ள துணை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் பங்கேற்ற சிஐடியூ தலைவர் வேல்முருகன், செயலர் ஜெயராமன், நிர்வாகிகள் குப்புசாமி, திருஅரசு உள்ளிட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

More from the section

அண்ணாமலைப் பல்கலை.யில் பல் மருத்துவ கல்வியியல் நிகழ்ச்சி
பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவன் மீட்பு
தைப்பூசம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீர்த்தவாரி
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு
ஜனவரி 26,27-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாடு