புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

முழு அடைப்பு: 14 இடங்களில் சாலை மறியல்: 628 பேர் கைது

By  கடலூர்,| DIN | Published: 11th September 2018 08:48 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சாலை மறியலும், 2 இடங்களில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 628 பேர் கைது செய்யப்பட்டனர்.
 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.
 இந்தப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தையொட்டி மாவட்டத்தில் 14 இடங்களில் சாலை மறியலும், 2 இடங்களில் தபால் நிலையம் முற்றுகையும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டதாக 628 பேர் கைது செய்யப்பட்டனர்.
 அரசுப் பேருந்துகள் இயக்கம்: மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்ட நிலையில், தனியார் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. குறிப்பாக புதுச்சேரிக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இயங்கின. சுமார் 50 சதவீத ஷேர் ஆட்டோக்கள் இயங்கின. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் முழுமையாக இயங்கின. போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை.
 சாலை மறியல்: போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடலூர் லார்ன்ஸ் சாலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
 இதில், திமுக தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைசெல்வன், மதிமுக மாவட்ட நிர்வாகி என்.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், நகரச் செயலர் ஜி.மணிவண்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டுரங்கன், அன்பழகன், நாராயணன், கார்த்திகேயன், ராமராஜன், ராமதுரை, சாமி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர்.
 இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.மருதவாணன், எம்.சுப்பராயன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். வட்ட செயலர் தமிழ்மணி தலைமை வகிக்க, வட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் முருகன், மகேஷ், அமாவாசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநிலக் குழு உறுப்பினர் வி.குளோப், நகரச் செயலர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலர் சுந்தர்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 மீனவர்கள் போராட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் ஆயிரம் விசைப் படகுகள், 5 ஆயிரம் நாட்டுப் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
 

More from the section

மாணவர்களுக்கு ரோல்பால் போட்டி
வடலூரை புனித தலமாக அறிவிக்கக் கோரி மனு
ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை
சிதம்பரத்தில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமை: மாதர் சங்கத்தினர் சாலை மறியல்