புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தென் மண்டல மின் கூட்டமைப்பினர் ஆலோசனை.

DIN | Published: 12th September 2018 08:53 AM

தென் மண்டல மின் கூட்டமைப்பின் உறுப்பு நிறுவனங்களுக்கு இடையேயான 147-ஆவது ஆலோசனைக் கூட்டம், நெய்வேலியில்  திங்கள்கிழமை நடைபெற்றது.
 தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் மின் நிலையங்களையும், மின் வாரியங்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு பெங்களூருவில் தென்மண்டல மின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டமைப்பானது, உறுப்பு மின் நிலையங்களின் செயல்பாடுகள், மின் தொகுப்பு பிரச்னைகளை ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும். 
இதற்காக அனைத்து மின் நிலையங்களின் அதிகாரிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட, இயக்கப் பணிகளை ஒருங்கிணைக்கும் உப குழு ஒவ்வொரு மாதமும் பெங்களூருவில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளும். இந்தக் கூட்டத்தை நெய்வேலியில் நடத்த வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உபகுழுவின் 147-ஆவது ஆலோசனைக் கூட்டம் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. தென்மண்டல மின் கூட்டமைப்பின் உறுப்பினர் செயலர் எஸ்.ஆர்.பட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 
அவர் பேசுகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் உபரி மின்சாரத்தை நேரடியாக விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளதையும், கேரள வெள்ளத்தின்போது விரைவான நிவாரணப் பணிகளை மேற்கொண்ட கேரள மின்வாரிய பணியாளர்களையும் பாராட்டினார். 
 தென் மண்டல மின்சக்தி பகிர்மான மையத்தின் துணைப் பொது மேலாளர் வி.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தை என்எல்சி இந்தியா நிறுவன மின் துறை மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன் தொடக்கி வைத்தார். தென்மண்டல மின்கூட்டமைப்பு மற்றும் தென்மண்டல மின்சக்தி பகிர்மான மையத்தின் அதிகாரிகளும் 
கூட்டத்தில் பங்கேற்றனர். என்எல்சி இந்தியா அனல்மின் நிலையங்களின் செயல் இயக்குநர் டி.வெங்கடசுப்பையா வரவேற்றார். 
 மின்துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன் தொடக்க விழாவில் பேசினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை தேசிய காற்றாலை மின்சக்தி கல்வி நிலையத்தின் தலைமை  இயக்குநர் கே.பலராமன், காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களைப் பற்றி  எடுத்துக்கூறினார். 
 என்எல்சி இந்தியா வர்த்தகத் துறை செயல் இயக்குநர் எ.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

மாணவர்களுக்கு ரோல்பால் போட்டி
வடலூரை புனித தலமாக அறிவிக்கக் கோரி மனு
ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை
சிதம்பரத்தில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்
5 மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம்