வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ஜனவரி 26,27-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாடு

DIN | Published: 22nd January 2019 08:27 AM

கடலூரில் வருகிற 26, 27-ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார். 
கடலூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 8-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் 6-ஆவது மாநில மாநாடு கடலூரில் ஜன.26, 27-ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. 
முதல் நாளில் 4 அமர்வுகளில் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. இரண்டாவது நாளில் அரசியல் இயக்க அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார். 
தொடர்ந்து நடைபெறும் பொது மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பங்கேற்று பேசுகிறார். முன்னதாக, சங்கத்தின் பேரணியும் நடைபெறுகிறது. 
மத்திய, மாநில அரசுகள் பின்பற்றும் கொள்கைகள் அரசுப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரோதமாக உள்ளன. இந்தக் கொள்கையை மாற்றி மக்களுக்கும், பணியாளர்களுக்கும் ஆதரவானதாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சியினரை அழைத்துள்ளோம். 
மாநாட்டில் தொமுச பொதுச் செயலர் மு.சண்முகம், மதிமுக மாநில துணைத் தலைவர் மல்லைசத்யா, ஜனநாயக மாதர் சங்கம் தலைவர் உ.வாசுகி, தமிழ்மாநில காங்கிரஸ் பொதுச்செயலர் முனவர்பாட்ஷா, காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.விஸ்வநாதன், பொதுஉடமை ஆர்வலர் கே.ஜீவபாரதி ஆகியோரும் பேசுகின்றனர் என்றார் அவர்.  அப்போது, மாநில துணைத் தலைவர் கு.சரவணன், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.ஆர்.குப்புசாமி, பொருளாளர் மு.ராஜாமணி, செயலர் வி.சிவக்குமார், மாவட்ட செயலர் ஏ.வி.விவேகானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

More from the section

ரூ.6 ஆயிரம் பெற தகுதியான விவசாயிகள் பெயர் பட்டியல் வெளியீடு
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு
புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்பு
பள்ளி ஆண்டு விழா
"5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கூடாது'