திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

குடிநீரில் புழு: காரைக்காலில் பொதுப்பணி துறையினர் ஆய்வு

DIN | Published: 18th December 2018 10:45 AM

குடிநீரில் புழு இருப்பதாக குடியிருப்புவாசிகள்  தெரிவித்த புகாரின் அடிப்படையில், பொதுப் பணித் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். 
காரைக்காலில் டாக்டர் அம்பேத்கர் வீதியில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீரில் புழு இருப்பதாக  புகார் எழுந்தது. பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் (குடிநீர் பிரிவு) பக்கிரிசாமி தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் ஆய்வு செய்தனர். புழுவுடன் உள்ள குடிநீரை அதிகாரிகளிடம் பொதுமக்கள் காட்டினர். குடிநீர் குழாய் வரும் பகுதி, வீடுகளில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருக்கும் பகுதி, சாக்கடை பகுதி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
புயலில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்த நிலையில், இவற்றோடு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டிருக்குமா என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள், பிளம்பர் உள்ளிட்ட ஊழியர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் 100 சதவீதம் சுத்தமாகவே இருக்கிறது. 
குடிநீரில் புழு இருப்பதாகக் குறிப்பிட்ட பகுதியினரே கூறுகின்றனர். வீடுகளில் கீழ்நிலைத் தொட்டி நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமலோ, குடிநீர் குழாய் மிகவும் பழைமையானதாகவோ இருக்கலாம். கழிவுநீர் செல்லும்போது அதன் வழியே புழுக்கள் சென்றிருக்கலாம். 
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. மாலை நேரத்தில் குடிநீர் விநியோகிக்கும்போது, உரிய முறையில் ஆய்வு செய்து, பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றனர்.


 

More from the section

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
மின் கட்டண நிர்ணயம்: நாளை கருத்துக் கேட்பு
அரசின் இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
இளையோர் தலைமைத்துவ பயிற்சி முகாம்
நிர்வாகிகள் பதவியேற்பு