புதன்கிழமை 16 ஜனவரி 2019

ரூ.ஒரு லட்சம் ஊதியம் வழங்க எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

DIN | Published: 12th September 2018 06:57 AM

தமிழகத்தை போல எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.ஒரு லட்சத்து  5 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று புதுவை எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,000,  பயணப்படி ரூ.20,000  
(அரசு வாகனம் வழங்கியிருந்தால் கிடையாது),  தொகுதிப்படி ரூ.7,000, தொலைபேசிப்படி ரூ.5,000,  அஞ்சல் படி ரூ.2,500,   தொகுப்புப் படி ரூ.2,500,  செய்தித்தாள் படி ரூ.1,000,  இழப்பீட்டுப்படி ரூ.7,000 என மொத்தமாக ரூ.48 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த ஊதியத்தையும் பெரும்பாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களே பெற்று வருகின்றனர். ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசு காரை பெற்றுக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கழிக்கப்பட்டு,  ரூ.28 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 
எனவே, ஊதியத்தை உயர்த்திப் பெறுவது என்று  அனைத்துக்  கட்சி எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்தனர்.  இதற்கான ஆலோசனைக் கூட்டம்  சட்டப்பேரவை  வளாகத்தில் நடைபெற்றது.  இதில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் தமிழகத்தைப்போல, ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரமாக ஊதியத்தை உயர்த்தி புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்க வேண்டும்,  கேரளத்தை போல பெட்ரோல் வாகனம் வழங்க கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர், இந்த முடிவு குறித்து பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினர்.
அப்போது அடுத்து நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவேற்றி,  மத்திய அரசுக்கு அனுப்பி உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

More from the section

ஐ.ஐ.டி. தேர்வில் சிறப்பிடம்
பொங்கல் பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர் வாழ்த்து
நகைகளுக்காக இரு பெண்களைக் கொன்றவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம்
லாரி மோதியதில் தனியார் நிறுவன அதிகாரி சாவு