சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

இளைஞர் கொலை வழக்கு: 5 பேர் கைது

DIN | Published: 22nd January 2019 08:46 AM

புதுச்சேரியில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார் தோட்டம் 2 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரதீஷ் (எ) பிரகாஷ் (26). சனிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த இவரை ஆயுதங்களுடன் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரதீஷுக்கும் சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முரளிக்கும் (29)  திருமண போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு வசூலித்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறிலும் பிரதீஷுக்கும் முரளிக்கும், தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும்,  கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரதீஷ், முரளி தரப்பினரை தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த முரளி, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான ரவி மகன் குஞ்சுமணி (23), சேகர் மகன் பாண்டியன் (25), ரவி மகன் விஜய் (எ) சங்கர் (26), கிளியனூர் காவல்நிலையத் தெருவைச் சேர்ந்த முரளியின் உறவினர் ரங்கநாதன் மகன் பிரதாப் (26) ஆகியோருடன் சேர்ந்து சமாதானம் பேசுவதற்காக பிரதீஷை அழைத்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், புதுவை அடுத்த தென்னலில் பதுங்கியிருந்த முரளி, குஞ்சுமணி, பாண்டியன், விஜய், பிரதாப் ஆகிய 5 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். இதில் முரளி மீது லாசுப்பேட்டை காவல்நிலையத்தில் நகை பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், 3 செல்லிடப்பேசிகள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 5 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
 

More from the section

ஜிப்மர் மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார்
சமுதாய வளர்ச்சிக்கு மாணவிகளின் பங்களிப்பு அவசியம்: முதல்வர் வே. நாராயணசாமி
வில்லியனூரில் ரூ.8 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க பூமி பூஜை
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி
புதுவையில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: பாஜக மாநிலத் தலைவர்