வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க சுகாதாரத் திட்ட ஊழியர்கள் வலியுறுத்தல் 

DIN | Published: 22nd January 2019 08:48 AM

தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் திட்ட ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதார திட்ட ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தே. வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசின் நலவழித்துறையில் தேசிய சுகாதார திட்ட இயக்கத்தின் கீழ் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ரத்தப் பரிசோதகர்கள், ஆலோசகர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மேலும் பல்வேறு நிலைகளில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் நிரந்தர ஊழியர்களைவிட 5 இல் ஒரு பங்கே ஊதியம் பெற்று வருகின்றனர். 
மேலும், நிரந்தர ஊழியர்களுக்கான எந்த சலுகைகளும் இல்லை.  எனவே, மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவமுள்ள ஊழியர்களுக்கு 10 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவமுள்ள ஊழியர்களுக்கு 15 சதவீதமும் பணி அனுபவத் தொகை, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 5 சதவீத ஊதிய உயர்வுடன் சேர்த்து வழங்க முடிவு செய்ததற்கான கடிதத்தை புதுவை மாநில சுகாதார திட்ட இயக்ககத்துக்கு கடந்த டிசம்பரில் அனுப்பினோம். 
இதன்படி, உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு ஏப்ரல் 2018 முதல் அமலுக்கு வந்தாலும், இந்த ஊதிய உயர்வு இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.  இது குறைந்தபட்ச தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களிடையே சலசலப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதுவை அரசும், நலவழித்துறை அதிகாரிகளும் உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுப்படி ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

தார்சாலை அமைக்க பூமி பூஜை
மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா
தொழிலாளர் துறை சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
அக்கல்கோட் மஹாராஜின் பாதுகைகளுக்கு தீர்த்தவாரி
புதுவை பல்கலை.க்கு புதிய பதிவாளர் நியமனம்