சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை நடத்திவிட்டு பொருளாதார இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

DIN | Published: 22nd January 2019 08:47 AM

பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை நடத்திவிட்டு பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும்,  முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:  மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள பொருளாதார இட ஒதுக்கீடு நடவடிக்கையால், முன்னேறிய வகுப்புக்கும் பின்தங்கிய வகுப்புக்கும் உள்ள சமூக ஏற்றத்தாழ்வு பெருகும்.  இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே தோற்கடித்துவிடும்.  புதுவையில் உள்ள மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கின்றனர்.  ஆனால் அவர்களுக்கு 50 சதவீத  இட ஒதுக்கீடு மட்டும்தான் அளிக்கப்படுகிறது.
புதுவை யூனியன் பிரதேசமாக இருந்ததால், அதற்கென்று தனியான இட ஒதுக்கீட்டுக் கொள்கை இல்லாமல், மத்திய அரசின் கொள்கையைப் பின்பற்றி வந்தது.  அதன்படி புதுவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது.  பின்தங்கிய மக்களுக்கு மண்டல் குழு பரிந்துரைகள் அகில இந்திய அளவில் செயல்படுத்தியபோதுதான் அது புதுவையிலும் செயல்படுத்தப்பட்டது. 
புதுவையில் 2005-இல் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.  தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடு 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.  மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மீனவர் சமுதாயத்தைப் பிரித்து தீவிர பின்தங்கிய வகுப்பு பட்டியல் உருவாக்கி அவர்களுக்கு தனி ஒதுக்கீடாக 2 சதவீதம் கொடுத்தது அவர்களுக்கு அநீதியை இழைத்துள்ளது.  
எனவே, புதுவையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அளவான 50 சதவீதத்தை தமிழகத்தில் உள்ளதுபோல 69 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநில அளவிலான பிற்பட்டோர் கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டு அதன் அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பிரித்து வழங்க வேண்டும்.  அதன் பின்னர்தான் உயர் சாதியினருக்கான பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

More from the section

ஜிப்மர் மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார்
சமுதாய வளர்ச்சிக்கு மாணவிகளின் பங்களிப்பு அவசியம்: முதல்வர் வே. நாராயணசாமி
வில்லியனூரில் ரூ.8 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க பூமி பூஜை
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி
புதுவையில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: பாஜக மாநிலத் தலைவர்