வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

"புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்க வேண்டும்'

DIN | Published: 22nd January 2019 08:48 AM

புதுவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்க வேண்டும் என புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பேரவை சார்பில் 87 ஆவது சிந்தனையரங்கம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு பேரவையின் தலைவர் கோ. செல்வம் தலைமை வகித்தார். புலவர் தமிழ்மாமணி, இ. பட்டாபிராமன், பொருளாளர் அ. மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் எஸ். குமாரகிருஷ்ணன் வரவேற்றார்.
  மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குரிய ஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அமல்படுத்தப்பட வேண்டும்.  புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த, உரிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்.
புதுவை மாநில இளைஞர்கள் குறிப்பாக கணினி பட்டதாரிகள் அதிகளவில் வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதை கருத்தில் கொண்டு புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
திருவள்ளுவரின் 2050 ஆம் ஆண்டு விழாவை புதுச்சேரி அரசு ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். அவரது பெயரில் மாநில அரசு புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
முன்னதாக, புதுச்சேரி போக்குவரத்துத் துறை கருத்தாளர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து விழிப்புணர்வுக் கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பாவலர் பைரவி, துணைச் செயலர் பிச்சைமுத்து தலைமையில் வாழ்க வள்ளுவம் என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது.

More from the section

தார்சாலை அமைக்க பூமி பூஜை
மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா
தொழிலாளர் துறை சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
அக்கல்கோட் மஹாராஜின் பாதுகைகளுக்கு தீர்த்தவாரி
புதுவை பல்கலை.க்கு புதிய பதிவாளர் நியமனம்