செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

அவலூர்பேட்டையில் 15 ஆயிரம் லி. எரிசாராயம் பறிமுதல்: டேங்கர் லாரியில் கடத்தி வந்து பதுக்கியது அம்பலம்

By  விழுப்புரம்,| DIN | Published: 11th September 2018 08:46 AM

செஞ்சி அருகே அவலூர்பேட்டையில் மலையடிவாரப் பகுதியில் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,625 லிட்டர் எரிசாராயம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தி வரப்பட்டு, விற்பனைக்காக கேன்களுக்கு மாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் சாராய வியாபாரி ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அவலூர்பேட்டை பகுதியில் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் அங்குள்ள மலையடிவாரப்பகுதிக்குச் சென்று நடத்திய அதிரடி சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்ட 387 கேன்களில் இருந்த 13 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதே ஊரிலுள்ள ஏரிப் பகுதியில் சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கேன்களில் இருந்த 2,625 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். ஒரேநாளில் 15,625 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் அவலூர்பேட்டை பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
 விசாரணையில், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டேங்கர் லாரியில் எரிசாராயத்தை அவலூர்பேட்டை மலையடிவாரப்
 பகுதிக்கு கடத்தி வந்து கேன்களுக்கு மாற்றி இருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த அளவுக்கு சாராயம் எப்படி கடத்தி கொண்டுவரப்பட்டது, அதுகுறித்து உள்ளூர் போலீஸாருக்கு எவ்வாறு தெரியாமல் இருந்தது என்று கேள்வியெழுப்பும் அப்பகுதி மக்கள், இது போன்ற சம்பவங்கள் தொடராதிருக்க மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இரு எஸ்.ஐ.கள் பணியிடமாற்றம்: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டும் இதுதொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுபதி ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
 

More from the section

வாடகை காரை ஒப்படைக்காமல் ஏமாற்றியவர் கைது
மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மௌன அஞ்சலி
விழுப்புரம் அருகே: காவல் துறை வாகனம் மோதியதில் 3 பேர் சாவு
காரில் மது கடத்திய இளைஞர் கைது