24 பிப்ரவரி 2019

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக பட்டதாரி குடும்பத்தினருடன் போராட்டம்: விழுப்புரம் ஆட்சியரகத்தில் பரபரப்பு

By  விழுப்புரம்,| DIN | Published: 11th September 2018 09:19 AM

நிலப்பிரச்னை காரணமாக, தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறி, பட்டதாரி ஒருவர் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையாப்பிள்ளை(41). இவர் தனது குடும்பத்தினரோடு, திங்கள் கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்து, தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறி, பதாகைகளை ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 அப்போது அவர் கூறியதாவது: ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நான், ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை இல்லாததால், புதுப்பாலப்பட்டு கிராமத்திலேயே 69 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 முன்விரோத பிரச்னையில், கடந்த ஆக.17-ஆம் தேதி, எங்கள் ஊரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முனுசாமி ஆகியோர் அடியாட்களோடு வந்து, எனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு, தட்டிக்கேட்ட என்னையும் தாக்கினர். இது குறித்து, சங்கராபுரம் போலீஸில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
 இதனால், என் குடும்பத்தினரையும், எனது அண்ணன்களான தர்மலிங்கம், காந்தி, கோவிந்தராஜ் உள்ளிட்ட உறவினர்கள் 7 பேரின் குடும்பத்தினரையும், கோவிந்தசாமி, முனுசாமி தரப்பினர் ஒதுக்கி வைத்துள்ளனர். தண்ணீர் பிடிக்காமல் தடுத்தும், மின்சாரம் தடை ஏற்படுத்தியும், பிறர்களிடம் பேசக்கூடாது எனவும், வரும் செப்.14-ல் நடைபெறும் கோயில் திருவிழாவுக்குவரக் கூடாதென தள்ளி வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர்.
 அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால், ஊரிலிருந்து வெளியேறி அருகில் உள்ள பூட்டை கிராமத்தில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறோம். சங்கராபுரம் காவல் நிலையம், வட்டாட்சியரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் ஊருக்குள் செல்வதற்கு பாதுகாப்பளிக்க வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட, இளையாப்பிள்ளை குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றிய போலீஸார், ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். மனுவைப் பெற்ற அதிகாரிகள், காவல் துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால், ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

More from the section

அதிமுக எம்.பி. ராஜேந்திரன் கார் விபத்தில் பலி
வருவாய்த் துறையினர் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.47 ஆயிரம் பறிப்பு
மின் ஊழியர் மத்திய அமைப்பு பேரவைக் கூட்டம்
அங்கன்வாடி பணிக்கு நேர்முகத் தேர்வு