17 பிப்ரவரி 2019

மாவட்டம் முழுவதும் காங்., திமுக, இடதுசாரிகள் மறியல்

By  விழுப்புரம்,| DIN | Published: 11th September 2018 09:21 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 உளுந்தூர்பேட்டையில்...
 முழு அடைப்பையொட்டி, உளுந்தூர்பேட்டையில் 70 சதவிகித கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. ஒரு சில தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
 உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஷேக் தாவூத், திமுக நகரச் செயலாளர் டேனியல்ராஜ் ஆகியோர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில ஊர்வலமாகச் சென்று, பேருந்து நிலையம் எதிரில் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
 செஞ்சியில்...
 செஞ்சி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையம் உள்ளிட்ட சில கடைகள் மட்டும் திறந்திருந்தன.
 செஞ்சியில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், மனித நேய மக்கள் கட்சியினர் செஞ்சி கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 பகல் 12 மணியளவில் திமுக எம்எல்ஏ செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆர்.பூபதி, காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தினகரன், பாலப்பட்டு சண்முகம், பழனி, கோணை ராஜா, திமுக ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செஞ்சி மஸ்தான் உள்பட 105 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 திருக்கோவிலூரில்...
 பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருக்கோவிலூர் பகுதியில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திருக்கோவிலூர் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், பேருந்து நிலையத்துக்கு குறைவான பயணிகளே வந்திருந்தனர். 50 சதவீத ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
 திருக்கோவிலூர் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடின. இந்தநிலையில் பெட்ரோல்-
 டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அரகண்டநல்லூரில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், திமுக ஒன்றியச் செயலர் அ.சா.ஏ.பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 கள்ளக்குறிச்சியில்...
 கள்ளக்குறிச்சி நகரில் காலையில் மூடப்பட்டிருந்த அனைத்துக் கடைகளும் பகல் 12 மணிக்குமேல் திறக்கப்பட்டன. அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயங்கின. ஆட்டோக்கள் மிகக் குறைந்தளவில் இயங்கின. மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை.
 கள்ளக்குறிச்சியில் நான்குமுனை சந்திப்பில் இடதுசாரிகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் மணி தலைமையில் 15 பெண்கள் உள்பட 50 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் அப்பாவு தலைமையில் 20 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் 20 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் 15 பெண்கள் உள்பட 35 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 அதே போல கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு சின்னசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
 திண்டிவனத்தில்...
 திண்டிவனத்தில் முழு அடைப்பையொட்டி, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
 வண்டிமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தார். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 முன்னாள் மாவட்ட தலைவர் தனுசு,மாவட்டப் பொருளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் வெங்கட், மதிமுக நகரச் செயலர் பாஸ்கர், தமாகா நகரத் தலைவர் சீனுவாசன், சிஐடியூ சார்பில் ராமதாஸ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
 
 
 

More from the section

மீண்டும் துளிர் விடும் நெகிழிப் பைகள்!
செஞ்சி, வல்லம் பகுதிகளில் புதிய அரசுக் கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
சமூக நலத் துறை சேவை மையத் திட்ட பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
சாலை விரிவாக்கப் பணிகள் தாமதம்: ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு