வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By  செஞ்சி,| DIN | Published: 11th September 2018 08:43 AM

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
 பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகம் மட்டுமல்லாது, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பது வழக்கம்.
 அதேபோல, ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
 காலையில், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மலர் அலங்காரம், நடைபெற்று தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், இரவு 11.30 மணியளவில் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக அங்காளம்மன் மயில் வாகனத்தில் எழுந்தருளி ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடலை பாடினர்.
 தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
 விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கணேசன், அறங்காவலர்கள் கோயில் மேலாளர் மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில், செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

More from the section


உளுந்தூர்பேட்டையில் தவாக கொடியேற்று விழா


சிறுமியிடம் தகராறில் ஈடுபட்ட  கும்பலை பிடிக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

காணும் பொங்கல் கொண்டாட்டம்: காவல் துறை எச்சரிக்கை
காவல் நிலையங்களில் பொங்கல் விழா
மாட்டுப் பொங்கல்: கிராமங்களில் கோலாகலம்