புதன்கிழமை 16 ஜனவரி 2019

தொடர் விபத்துகளைத் தடுத்து உயிர்களைக் காக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்

DIN | Published: 12th September 2018 09:32 AM

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் சாலை விபத்துகளைத் தடுத்து, விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.    
விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
விழுப்புரம் காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்த முகாம் தொடக்க விழாவில்  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் வரவேற்றார். 
சுகாதாரத் துறை இணை இயக்குநர் சுந்தரராஜன்,   துணை இயக்குநர்கள் பாலுசாமி,   ஜெமினி,  பார்வை இழப்பு தடுப்புத் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன்,   காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ.சங்கர்,  அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் நாசர்,   வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் சிவக்குமார்,  கவிதா,   பிரான்சிஸ்,  போக்குவரத்து காவல் ஆய்வாளர்  அப்பண்டைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் முகாமை தொடக்கி வைத்துப் பேசியதாவது: 
விழுப்புரம் மாவட்டம் நீண்ட தொலைவிலான தேசிய,  மாநில நெடுஞ்சாலைகளைக் கொண்டது.  
வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை ஓட்டி வருபவர்கள், விழுப்புரம் மாவட்டத்தைக் கடக்கும்போது, தூக்கக் கலக்கத்தாலும், உடல் சோர்வாலும் விபத்துகளில் சிக்குகின்றனர்.
விபத்தில் இறக்கும் ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது.  விபத்தில் இறக்கும் நபரை நம்பி அவரது குடும்பம் உள்ளது.  அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.  இதனால் விபத்துகளை குறைக்க பாடுபட வேண்டும்.     
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,  வட்டாரப் போக்குவரத்துத் துறை,  காவல் துறை சார்பில்,    விபத்துகளை  தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதனால் விபத்துகளும் கணிசமாக குறைந்து வருகிறது.  
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 916 பேர் இறந்தனர்.  இது 2017-ல் 834-ஆக குறைந்தது.  நிகழாண்டு 6 மாதங்களில் 272-ஆக குறைந்துள்ளது.  இதற்குக் காரணமான வட்டாரப் போக்குவரத்து,  போக்குவரத்து  காவல் துறை உள்ளிட்ட துறையினருக்கு பாராட்டுகள். 
மேலும்,  விபத்து தடுப்பு நடவடிக்கையாக பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.  
பல தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஓய்வு பெற்றவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், வயது காரணமாக கண் பார்வை  அவசியமாகிறது.     
 இதற்காக,  வட்டாரப் போக்குவரத்துத் துறை இந்த முகாமை நடத்துகிறது என்றார்.
மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
 

More from the section

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வாடகை மையம் அமைக்க கரும்பு அறுவடை இயந்திரம் அளிப்பு
பொங்கல் ஊக்கத்தொகையும் புறக்கணிப்பு: பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி
தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தேசிய இளையோர் வார விழா