புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

விபத்தில் 6 பேர் உயிரிழந்த வழக்கு: லாரி ஓட்டுநருக்கு 6 ஆண்டு சிறை

DIN | Published: 12th September 2018 09:30 AM

உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 6 பேர் உயிரிழந்த வழக்கில்,  டேங்கர் லாரி ஓட்டுநருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அதை 6 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு  உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுந்தரம். தனியார் பல்கலைக்கழகத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மகனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக 13.11.2016 அன்று குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு காரில் சென்றுவிட்டு, பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஆசனூர் அருகேசென்றபோது, ஆந்திர மாநிலத்திலிருந்து எண்ணெய் லோடு ஏற்றிவந்த டேங்கர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சுந்தரம், சுசிலா, பத்மா, ஆகாஷ், பாப்பாத்தி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2  ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் எம்.கிருஷ்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த  உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஏ.தனசேகரன்,  டேங்கர் லாரி ஓட்டுநர் வேலூர் மாவட்டம், இடையான்பட்டியைச் சேர்ந்த  மகாதேவன் மகன் தாமோதரனுக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  இந்த தண்டையை 6 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பில் உத்தரவிட்டார்.

More from the section

சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
இறைச்சி கடைக்கு இடம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் அருகே இளைஞர், பெண் தற்கொலை
அனைத்து மக்கள் விடுதலை கட்சி தர்னா
மூதாட்டி கொலை: இளைஞர் கைது