வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

வெளிநாட்டு வேலைக்குச் சென்று மாயமான கணவரை மீட்டுத் தரக் கோரி மனைவி மனு

DIN | Published: 12th September 2018 09:31 AM

கள்ளக்குறிச்சி பகுதியிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் சென்று மாயமான கணவரை மீட்டுத் தரக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுடன் வந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடகீரனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பிரகாஷ் மனைவி கன்னியம்மாள் (25). இந்தத் தம்பதிக்கு அரிகோவிந்தன் (5), கோடீஸ்வரி (3) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த கன்னியம்மாள், மனு ஒன்றை அளித்தார். அதில், அவர் கூறியுள்ளதாவது:
கூலி வேலை பார்த்து வந்த பிரகாஷுக்கும், எனக்கும் கடந்த 2010-இல் திருமணமாகி, 2 பிள்ளைகள் உள்ளனர். உள்ளூரில் வேலை ஏதும் கிடைக்காததால், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் முகவர், எனது கணவரை சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கு 7 மாத காலம் கூலி வேலை பார்த்து வந்தார்.
இதையடுத்து, குடும்பத்தைப் பார்ப்பதற்காக அங்கிருந்து ஊருக்குத் திரும்பி வந்த நிலையில், மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சி செய்தார். அப்போது, சவூதியில் வேலை பார்த்த உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த அரசி என்பவர் செலவு செய்து பயணக் கட்டணங்களைச் செலுத்தியதால், மீண்டும் எனது கணவர் பிரகாஷ் சவூதிக்குச் சென்று வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வந்த பிரகாஷ், அடிக்கடி செல்லிடப்பேசி மூலம் எங்களிடம் பேசி வந்தார். கடந்த சில மாதங்களாக அவரிடமிருந்து செல்லிடப்பேசி அழைப்புகள் வராமல் தவித்து வந்தோம்.
இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் அவருடன் தங்கி வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம், கல்லக்குடியைச் சேர்ந்த சந்திரசேகர், எங்களை தொடர்புகொண்டு பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார்.
 பிரகாஷை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த முகவரிடம் கேட்டாலும் சரியான தகவலைக் கூறாமல் உள்ளார். எனவே, பிரகாஷ் இறந்ததாகக் கூறுவதில் சந்தேகம் உள்ளது. 
அவரின் நிலை குறித்து அறிந்திட அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவைப் பெற்ற ஆட்சியர் இல.சுப்பிரமணியன், அரசுக்கு பரிந்துரைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று 
உறுதியளித்தார்.
 

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'