புதன்கிழமை 20 மார்ச் 2019

மூதாட்டி கொலை: இளைஞர் கைது

DIN | Published: 19th February 2019 09:22 AM

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்ற இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர். 
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை (70). குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் நாகம்மாள் (50) தனது கணவர் மீன் வியாபாரி முனியனுடன் (55) அதே பகுதியில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சலை தனது வீட்டு கதவை திறந்துவைத்தபடியே தூங்கிவிட்டார். நள்ளிரவு 12 மணியளவில் இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, அங்கு தூங்கிக்கொண்டிருந்த அஞ்சலையின் கழுத்தை திடீரென கத்தியால் அறுத்ததாக தெரிகிறது. இருப்பினும் உயிர் பிரியாததால் அந்த இளைஞர் அஞ்சலையின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அஞ்சலை அணிந்திருந்த மூக்குத்தியை திருடிக்கொண்டு தப்பினார். 
 மீன் வியாபாரத்துக்காக முனியன் திங்கள்கிழமை அதிகாலையில் எழுந்தார். அப்போது, அஞ்சலையின் வீட்டில் விளக்கு எரிந்ததால் அங்கு சென்று பார்த்தபோது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். 
 தப்பியோடிய மர்ம நபர் அரசூர் கூட்டுச் சாலை அருகே நின்றுகொண்டிருந்தார். அவர் போலீஸாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். இருப்பினும் போலீஸார் அவரை துரத்திப் பிடித்தனர். விசாரணையில் அவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் (24) எனத் தெரியவந்தது. அவர் அஞ்சலையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாராம். 
இதையடுத்து போலீஸார் அவரை கைதுசெய்தனர். விசாரணையில் கவிதாஸ் மீது பைக் திருட்டு, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட வழங்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாம்.

More from the section

ஆக்கப்பூர்வ தேர்தலாக மாற்ற வேண்டும்: விசிக வேட்பாளர் ரவிக்குமார்
கல்லைத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்.2-இல் தொடக்கம்
செஞ்சியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக: க.பொன்முடி