சனிக்கிழமை 23 மார்ச் 2019

"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'

DIN | Published: 22nd February 2019 09:33 AM

விழுப்புரத்தில் விளம்பரப் பதாகைகள் வைப்பது தொடர்பாக, பாரபட்சமின்றி, அனைவருக்கும் சமமான விதிகளை வகுத்து பின்பற்ற வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

விழுப்புரம் நகரில் பொது இடங்கள்,  சாலையோரங்களில்  விளம்பரப் பதாகைகள் வைப்பது தொடர்பாக, பொதுவான சட்டவிதிகளை பின்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.  நகரமைப்பு அலுவலர் ஜெயவேல்,   நகரமைப்பு ஆய்வாளர்கள் அமலின்சுகுனா,  முரளி,  மேலாளர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி,  நகரப் பகுதி மற்றும் சாலையோரங்களில், விதிகளை பின்பற்றி பதாகைகள்,  தட்டிகள் வைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பேசியதாவது: 

செல்வராஜ் (காங்கிரஸ்):  முக்கிய சாலைகளில் பேரணி,  ஊர்வலங்களுக்கு தடை விதிக்கின்றனர்.  ஆனால்,  சங்கங்கள்,  அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  

ஆசிரியர்கள் சங்கம் நடத்திய 10 நாள் மறியல் போராட்டத்தால் மக்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகினர்.  இதுபோன்ற போராட்டங்களுக்கு நகராட்சித் திடல் போன்ற இடங்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

விழுப்புரத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த உரிய இடம் வழங்குவதில்லை. பேருந்து நிலையம் போன்றவற்றையே ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.  இதில், ஆளும் கட்சி,  எதிர்கட்சிகள் பேதமில்லை.  பதாகைகள் வைப்பதற்கு, நகராட்சி இடம் எனில்,  நகராட்சியிடம் அனுமதி பெற்றால் போதும்.  ஆனால், கோட்டாட்சியர்,  நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெறச் சொல்லி அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும்.

முபாரக் (காங்கிரஸ்): அரசியல் கட்சியினரின் திடீர் போராட்டம், கூட்டங்களுக்கு அனுமதிக்கின்றனர்.  இலக்கிய அமைப்பு,  பொது நல அமைப்புகளுக்கு விதிகளை சொல்லி அலைக்கழிக்கின்றனர். 

தட்சிணாமூர்த்தி,  பாபு (அதிமுக):  மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வருவதால் விதிகளை பின்பற்றி பதாகைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். அனைவருக்கும் சமமான  விதிகளை வகுத்து பின்பற்றசெய்ய வேண்டும்.  

சக்கரை (திமுக):  ஆர்ப்பாட்டம்,  பொதுக் கூட்டங்களுக்கான இடங்களை தேர்வு செய்து கட்சி பேதமின்றி அனுமதி வழங்க வேண்டும்,  பல இடங்களில் நீண்ட காலமாக உள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்றார்.

அதிகாரிகள் பதிலளிக்கையில்,  பதாகைகள் தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,  அனைவரது கருத்துகளும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். 

வட்டார வளர்ச்சி அலுவலர் கே.நாராயணசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ஷபி, ஐ.ஜோசப் ஆனந்தராஜ்,  த.மஞ்சமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள், பொது கட்டடங்கள், சுவர்கள், இயற்கை வளங்களின் மீது அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றுதல், முறைப்படுத்துதல் தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனை வழங்கிப் பேசினர்.

கூட்டத்தில் அதிமுக ஒன்றிய பொருளாளர் பி.ராஜமாணிக்கம், திமுக ஒன்றிய செயலாளர் சி.வெங்கடாசலம், பாமக ஒன்றிய செயலாளர் அ.அன்பரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் என்.பாலு, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு டி.எம்.ஜெய்சங்கர் உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

More from the section

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.33 லட்சம் பறிமுதல்: ரூ.4 லட்சம் பாத்திரங்களும் பறிமுதல்
ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற தொழிலாளி!
பேருந்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கு: ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வுக்கு 9 ஆண்டு சிறை